பட்டினப்பாலை - மூலம்
பட்டினப்பாலை
கடியலூர்
உருத்திரங்கண்ணனார்
வசை இல் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி,
வான் பொய்ப்பினும், தான் பொய்யா, 5
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி,
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின், கவின் வாடி, 10
நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச் சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி,
கூட்டு நிழல், துயில் வதியும் 15
கோள் தெங்கின், குலை வாழை,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,
இன மாவின், இணர்ப் பெண்ணை,
முதல் சேம்பின், முளை இஞ்சி
அகல் நகர் வியல் முற்றத்து, 20
சுடர் நுதல், மட நோக்கின்,
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும் 25
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்து,
குறும் பல் ஊர் நெடுஞ் சோணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல் வாய்ப் பஃறி, 30
பணை நிலைப் புரவியின், அணை முதல் பிணிக்கும்
கழி சூழ் படப்பை, கலி யாணர்ப்,
பொழில் புறவின் பூந்தண்டலை,
மழை நீங்கிய மா விசும்பில்
மதி சேர்ந்த மக வெண் மீன் 35
உரு கெழு திறல் உயர் கோட்டத்து,
முருகு அமர் பூ முரண் கிடக்கை
வரி அணி சுடர், வான் பொய்கை,
இரு காமத்து இணை ஏரி,
புலிப் பொறிப் போர்க் கதவின் 40
திருத் துஞ்சும் திண் காப்பின்,
புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி, 45
ஏறு பொரச் சேறாகி,
தேர் ஓடத் துகள் கெழுமி,
நீறு ஆடிய களிறு போல,
வேறுபட்ட வினை ஓவத்து
வெண் கோயில் மாசு ஊட்டும்; 50
தண் கேணித் தகை முற்றத்து,
பகட்டு எருத்தின் பல சாலை;
தவப் பள்ளி; தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ, குயில் தம் 55
மா இரும் பெடையோடு இரியல் போகி,
பூதம் காக்கும் புகல் அருங் கடி நகர்,
தூது உண் அம் புறவொடு துச்சில் சேக்கும்
முது மரத்த முரண் களரி;
வரி மணல் அகன் திட்டை, 60
இருங் கிளை, இனன் ஒக்கல்,
கருந் தொழில், கலி மாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும்,
வயல் ஆமைப் புழுக்கு உண்டும்,
வறள் அடும்பின் மலர் மலைந்தும் 65
புனல் ஆம்பல் பூச் சூடியும்,
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்
நாள்மீன் விராஅய கோள்மீன் போல
மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ,
கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டி, 70
பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது,
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்,
கல் எறியும் கவண் வெரீஇப்,
புள் இரியும் புகர்ப் போந்தை
பறழ்ப் பன்றி, பல் கோழி, 75
உறைக் கிணற்றுப் புறச் சேரி,
மேழகத் தகரொடு சிவல் விளையாட
கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி,
நடு கல்லின் அரண் போல,
நெடுந் தூண்டிலில் காழ் சேர்த்திய 80
குறுங் கூரைக் குடி நாப்பண்;
நிலவு அடைந்த இருள் போல,
வலை உணங்கும் மணல் முன்றில்
வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த
வெண் கூதாளத்துத் தண் பூங் கோதையர், 85
சினைச் சுறவின் கோடு நட்டு,
மனைச் சேர்த்திய வல் அணங்கினான்,
மடல் தாழை மலர் மலைந்தும்;
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்;
புன் தலை இரும் பரதவர் 90
பைந் தழை மா மகளிரொடு,
பாய் இரும் பனிக் கடல் வேட்டம் செல்லாது,
உவவு மடிந்து, உண்டு ஆடியும்;
புலவு மணல், பூங் கானல்,
மா மலை அணைந்த கொண்மூப் போலவும், 95
தாய் முலை தழுவிய குழவி போலவும்,
தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல்,
தீது நீங்க, கடல் ஆடியும்;
மாசு போக, புனல் படிந்தும்; 100
அலவன் ஆட்டியும்; உரவுத் திரை உழக்கியும்;
பாவை சூழ்ந்தும்; பல் பொறி மருண்டும்;
அகலாக் காதலொடு பகல் விளையாடி
பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்,
பொய்யா மரபின், பூ மலி பெருந் துறை, 105
துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்,
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும், 110
நெடுங் கால் மாடத்து, ஒள் எரி நோக்கி,
கொடுந் திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும்,
பாடல் ஓர்த்தும், நாடகம் நயந்தும்,
வெண் நிலவின் பயன் துய்த்தும்,
கண் அடைஇய கடைக் கங்குலான், 115
மாஅ காவிரி மணம் கூட்டும்
தூ எக்கர்த் துயில் மடிந்து
வால் இணர் மடல் தாழை
வேல் ஆழி வியன் தெருவில்,
நல் இறைவன் பொருள் காக்கும் 120
தொல் இசைத் தொழில் மாக்கள்,
காய் சினத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாஅ போல,
வைகல்தொறும் அசைவு இன்றி,
உல்கு செயக் குறை படாது 125
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்,
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்று நிலத்து ஏற்றவும்,
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், 130
அளந்து அறியாப் பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி,
அருங் கடிப் பெருங் காப்பின்,
வலியுடை வல் அணங்கினோன்
புலி பொறித்து, புறம் போக்கி, 135
மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடைப் போர் எறி,
மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்
வரை ஆடு வருடைத் தோற்றம் போல,
கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை 140
ஏழகத் தகரோடு உகளும் முன்றில்
குறுந் தொடை நெடும் படிக்கால்
கொடுந் திண்ணை, பல் தகைப்பின்,
புழை, வாயில், போகு இடைகழி,
மழை தோயும் உயர் மாடத்து 145
சேவடி, செறி குறங்கின்,
பாசிழை, பகட்டு அல்குல்,
தூசு உடை, துகிர் மேனி,
மயில் இயல், மான் நோக்கின்,
கிளி மழலை, மென் சாயலோர் 150
வளி நுழையும் வாய் பொருந்தி,
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும்
காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன,
செறி தொடி முன்கை கூப்பி, செவ்வேள்
வெறி ஆடு மகளிரொடு செறியத் தாஅய், 155
குழல் அகவ, யாழ் முரல,
முழவு அதிர, முரசு இயம்ப,
விழவு அறா வியல் ஆவணத்து
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்; 160
வரு புனல் தந்த வெண் மணல் கான் யாற்று
உரு கெழு கரும்பின் ஒண் பூப் போல,
கூழுடைக் கொழு மஞ்சிகை,
தாழுடைத் தண் பணியத்து,
வால் அரிசிப் பலி சிதறி, 165
பாகு உகுத்த, பசு மெழுக்கின்,
காழ் ஊன்றிய கவி கிடுகின்
மேல் ஊன்றிய துகில் கொடியும்;
பல் கேள்வித் துறை போகிய
தொல் ஆணை நல் ஆசிரியர் 170
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும்;
வெளில் இளக்கும் களிறு போல,
தீம் புகார்த் திரை முன்துறை,
தூங்கு நாவாய், துவன்று இருக்கை,
மிசைக் கூம்பின் நசைக் கொடியும்; 175
மீன் தடிந்து, விடக்கு அறுத்து,
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்,
மணல் குவைஇ, மலர் சிதறி,
பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு நொடைக் கொடியோடு; 180
பிற பிறவும் நனி விரைஇ,
பல் வேறு உருவின் பதாகை நீழல்
செல் கதிர் நுழையாச் செழு நகர் வரைப்பின்
செல்லா நல் இசை அமரர் காப்பின்,
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும், 185
காலின் வந்த கருங் கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும், 190
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி,
வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின்
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சி, 195
கிளை கலித்துப் பகை பேணாது,
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்,
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்,
கொலை கடிந்தும், களவு நீக்கியும்,
அமரர்ப் பேணியும், ஆவுதி அருந்தியும், 200
நல் ஆனொடு பகடு ஓம்பியும்,
நான் மறையோர் புகழ் பரப்பியும்,
பண்ணியம் அட்டியும், பசும் பதம் கொடுத்தும்,
புண்ணியம் முட்டாத் தண் நிழல் வாழ்க்கை,
கொடு மேழி நசை உழவர் 205
நெடு நுகத்துப் பகல் போல,
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்,
வடு அஞ்சி, வாய் மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்ப நாடி,
கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது, 210
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி, துவன்று இருக்கை
பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு, 215
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும்,
முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்
வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய,
வாரேன்; வாழிய, நெஞ்சே! கூர் உகிர்க் 220
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு,
பிறர் பிணியகத்து இருந்து, பீடு காழ் முற்றி;
அருங் கரை கவியக் குத்தி, குழி கொன்று,
பெருங் கை யானை பிடி புக்காங்கு,
நுண்ணிதின் உணர நாடி, நண்ணார் 225
செறிவுடைத் திண் காப்பு ஏறி, வாள் கழித்து,
உரு கெழு தாயம் ஊழின் எய்தி
பெற்றவை மகிழ்தல் செய்யான், செற்றோர்
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்,
முடியுடைக் கருந் தலை புரட்டும் முன் தாள், 230
உகிருடை அடிய, ஓங்கு எழில் யானை,
வடி மணிப் புரவியொடு, வயவர், வீழ,
பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப,
தூறு இவர் துறுகல் போல, போர் வேட்டு,
வேறு பல் பூளையொடு உழிஞை சூடிப், 235
பேய்க் கண் அன்ன பிளிறுகடி முரசம்
மாக்கண் அகல் அறை அதிர்வன முழங்க,
முனை கெடச் சென்று, முன் சமம் முருக்கி,
தலை தவச் சென்று தண்பணை எடுப்பி,
வெண் பூக் கரும்பொடு செந்நெல் நீடி, 240
மா இதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி,
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை,
கொழுங் கால் புதவமொடு செருந்தி நீடி,
செறுவும் வாவியும், மயங்கி, நீர் அற்று,
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும்; 245
கொண்டி மகளிர், உண்துறை மூழ்கி,
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்,
மலர் அணி மெழுக்கம், ஏறிப் பலர் தொழ,
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்,
பரு நிலை நெடுந் தூண் ஒல்கத் தீண்டி, 250
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையும்;
அரு விலை நறும் பூத் தூஉய், தெருவில்
முது வாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரி புரி நரம்பின் தீந் தொடை ஓர்க்கும்
பெரு விழாக் கழிந்த, பேஎம் முதிர், மன்றத்து, 255
சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி,
அழல் வாய் ஓரி அஞ்சு வரக் கதிர்ப்பவும்;
அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்;
கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ,
பிணம் தின் யாக்கைப் பேய் மகள் துவன்றவும்; 260
கொடுங் கால் மாடத்து நெடுங் கடைத் துவன்றி,
விருந்து உண்டு ஆனாப் பெருஞ் சோற்று அட்டில்,
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து,
பைங் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்,
தொடுதோல் அடியர் துடி படக் குழீஇ, 265
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட
உணவு இல் வறுங் கூட்டு உள்ளகத்து இருந்து,
வளை வாய்க் கூகை நன் பகல் குழறவும்;
அருங் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய,
பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற 270
மலை அகழ்க்குவனே; கடல் தூர்க்குவனே;
வான் வீழ்க்குவனே; வளி மாற்றுவன் என,
தான் முன்னிய துறைபோகலின்,
பல் ஒளியர் பணிபு ஒடுங்க,
தொல் அருவாளர் தொழில் கேட்ப, 275
வடவர் வாட, குடவர் கூம்ப,
தென்னவன் திறல் கெட, சீறி, மன்னர்
மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள்,
மாத் தானை மற மொய்ம்பின்,
செங் கண்ணால் செயிர்த்து நோக்கி, 280
புன் பொதுவர் வழி பொன்ற,
இருங்கோ வேள் மருங்கு சாய
காடு கொன்று நாடு ஆக்கி,
குளம் தொட்டு வளம் பெருக்கி,
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி, 285
கோயிலொடு குடி நிறீஇ,
வாயிலொடு புழை அமைத்து,
ஞாயில்தொறும் புதை நிறீஇ,
பொருவேம் எனப் பெயர் கொடுத்து,
ஒருவேம் எனப் புறக்கொடாது, 290
திரு நிலைஇய பெரு மன் எயில்,
மின் ஒளி எறிப்பத்
தம் ஒளி மழுங்கி
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய
பசு மணி பொருத பரு ஏர் எறுழ்க் கழல் கால்,
பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும், 295
முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும்,
செஞ் சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண்
அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய, கானம்; அவன் 300
கோலினும் தண்ணிய, தட மென் தோளே!
Comments
Post a Comment