பட்டினப்பாலை - அறிமுகம்

                                                                    முன்னுரை

தமிழ் மொழியின் தொன்மை

இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழைமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல்[1]. அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், “என்ப”, “மொழிப”, ”கூறுப”, “என்மனார் புலவர்” என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்.  இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன.

 

சங்க இலக்கியம்

சங்க காலம் என்பது கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை என்பதைப் பொதுவாகப் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்கின்றனர். சங்க காலத்தில் இருந்த இலக்கியம் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள் புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதற்கேற்ப, சங்க காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களாக இருந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, புலவர்கள் பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் பத்து நூல்களாக்கினார்கள். மூன்று முதல் 140 அடிகளுடைய  பாடல்களில் சிறந்தவற்றை எட்டு நூல்களாகத் தொகுத்தார்கள். எட்டுத்தொகை என்ற சொல் அந்த எட்டு நூல்களையும் குறிக்கிறது. பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் எட்டுத்தொகையில் அடங்கிய எட்டு நூல்களும் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்கள் தொகுக்கப்பட்ட காலத்தைப் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

 

பத்துப்பாட்டு

கீழ்வரும் பாடலில் பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

 

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

 

பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்[2]. இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்து நூல்களும் ஆற்றுப்படை[3] என்னும் வகையைச் சார்ந்தவை. இந்த ஐந்து ஆற்றுப்படை நூல்களும் மதுரைக்காஞ்சியும் புறத்திணையைச் சார்ந்தவை. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை  மற்றும் பட்டினப்பாலை ஆகியவை அகத்திணையைச் சார்ந்தவை.

 

அகத்திணையும் புறத்திணையும்

பாடல்களை அகத்திணைப் பாடல்கள் புறத்திணைப் பாடல்கள்  என்று இருவகையாகத் தொல்காப்பியம் பிரிக்கிறது. திணை என்ற சொல் ‘நிலம்’, ‘இடம்’, ’குடி’, ‘ஒழுக்கம்’, ‘பொருள்’ என்ற பல பொருட்களையுடைய ஒருசொல். தமிழ் இலக்கியத்தில் திணை என்ற சொல் ‘பொருள்’ என்பதைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம், புறம் என்று பிரிப்பது தமிழ் இலக்கண மரபு. ஒருஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் பொழுதும், அவர்களின் திருமணத்திற்குப் பிறகும், தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவையாகையால், அவை அகப்பொருள் எனப்படும். அகப்பொருளைப்பற்றிப் பாடும் பாடல்கள் அகத்திணையில் அடங்கும். காதலைத் தவிர வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர், வீரம், வெற்றி, புகழ், கொடை, நிலையாமை முதலிய பொருட்களை மையப்பொருளாகக்கொண்ட பாடல்கள் புறத்திணையில் அடங்கும்.

 

அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் காதலன் காதலி அல்லது கணவன் மனைவி ஆகியோரின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றிய  கருத்துச் செறிவும் கவிதை  வளமும் கலந்த கற்பனைப் பாடல்கள். இந்தப் பாடல்களில் எவருடைய பெயரையும் குறிப்பிடுவதில்லை. காதலனையும் கணவனையும், தலைவன் என்றும், காதலியையும் மனைவியையும் தலைவி என்றும் குறிப்பிடுவதுதான் தமிழ் இலக்கண மரபு. அகத்திணையை கைக்கிளை, குறிஞ்சித் திணை, பாலைத் திணை, முல்லைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை, பெருந்திணை என்று ஏழு பிரிவுகளாகத் தொல்காப்பியம் வகுத்துள்ளது. அகத்திணைப் பாடல்களுள் பெரும்பாலானவை  குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என்னும் ஐந்து பிரிவுகளில் அடங்கும்.  ஒவ்வொரு திணைப்பாடலும் ஒரு மையக்கருத்தைச் சார்ந்ததாக இருக்கும். பாலைத்திணைப் பாடல்களின் மையக்கருத்து தலைவன் தலைவியைவிட்டுப் பிரிதலும் பிரிதலுக்குக் காரணமான நிகழ்வுகளையும் பற்றியது. 

 

பிரிதல்  என்பது காதலன் தன் காதலியைவிட்டுத் திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் பிரிவதையும் கணவன், பொருளுக்காகவும், போருக்காகவும், கல்விக்காகவும், அரசன் ஏவிய பணிகளுக்காகவும், பரத்தையோடு தொடர்பு கொள்வதற்காகவும்  தன் மனைவியை விட்டுப் பிரிவதையும்  குறிக்கிறது. பிரிதல் என்பது தலைவன் தலைவியைவிட்டுச் சில மாதங்கள் பிரிந்திருப்பதைக் குறிக்கிறதே ஒழிய நிரந்தரமான பிரிவைப் பற்றியது அன்று. எல்லாச் சூழ்நிலைகளிலும் பிரிந்தவர் மீண்டும் கூடுவது இலக்கிய மரபு

பட்டினப்பாலை

இப் பாடலின் தலைவன் பொருள் தேடுவதற்காக வெளியூருக்குச் செல்ல முடிவு செய்தான். ஆனால்,  தன் பிரிவால் தன் மனைவி வருந்துவாளே என்ற எண்ணம் அவனை வருத்தியது. தன் மனைவிக்கு அத்தகைய துன்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்று அவன் நினைத்தான். அந்த நிலையில் அவன் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக இப் பாடல் அமைந்துள்ளது. “நெஞ்சமே! செல்வ வளம் மிகுந்த இக் காவிரிப்பூம்பட்டினத்தையே நான் பெறுவதாக இருந்தாலும், என் மனைவியைவிட்டுப் பிரியமாட்டேன். பொருள் தேடுவதற்காக நான் கடந்து செல்லவேண்டிய காட்டு வழி சோழ மன்னன் கரிகாலன் பகைவர்களை நோக்கி எறியும் வேலைவிடக்  கொடுமையானவை. என் மனைவியின் தோள்களோ கரிகாலனின் செங்கோலைவிடக் குளிர்ச்சியானவை. ஆகவே, நான் இவளைவிட்டுப் பிரிந்து உன்னோடு வரமாட்டேன்.” என்று தலைவன் தன் நெஞ்சத்தை நோக்கிக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடல் பிரிதலை மையப் பொருளாகக் கொண்டுள்ளதால், இது பாலைத்திணையைச் சார்ந்த பாடல்.  இப்பாடல் பாலைத்திணையைச் சார்ந்த பாடலாக இருந்தாலும், சோழ நாட்டின் செழிப்பு, காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, கரிகாலனின் வீரம், வெற்றி, புகழ்  ஆகிய புறப்பொருளும் இதில் கலந்து இயற்றப்பட்டுள்ளது இப்பாடலின் தனிச் சிறப்பு. இப்பாடல் ஆசிரியப்பா மற்றும் வஞ்சிப்பா என்னும் இரண்டு பாடல் வகைகளும் கலந்த 301 அடிகளைக்கொண்ட நீண்ட பாடல்.

 

பட்டினப்பாலையின் ஆசிரியர்

பட்டினப்பாலை என்னும் இந்த நூலை இயற்றிய புலவரின் பெயர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். கடியலூர் என்பது இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓரூர் என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர், இக்காலத்தில், தமிழ்நாட்டில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் என்னும் ஊர் சங்க காலத்தில் திருக்கடிகை அல்லது கடிகை என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே கடியலூர் என்னும் ஊர் என்றும் கருதுகிறார்கள். எவ்வாறாயினும், இவர் கடியலூரைச் சார்ந்தவர் என்பதில் ஐயமில்லை. இவருடைய ஊர்ப்பெயரில் கருத்து வேறுபாடுகள் இருப்பதைப்போலவே இவர் பெயருக்கும் பல விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஒரு சிலர் இவர் பெயர் ருத்ரக்ருஷ்ண என்ற வடமொழிப் பெயரின் தமிழாக்கம் என்றும், வேறு சிலர், இவர் தந்தையார் பெயர் உருத்திரன் என்றும் இவரது பெயர் கண்ணனார் என்றும் கூறுவர்.  ஆனால், உரையாசிரியர்கள் இவரைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்றே தங்கள் நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.

 

இப்புலவர் பட்டினப்பாலை இயற்றியதோடு மட்டுமல்லாமல், பத்துப்பாட்டிலுள்ள பெரும்பாணாற்றுப்படை என்னும் பாடலையும், குறுந்தொகையின், 352 ஆவது பாடலையும், அகநானூற்றிலுள்ள 167 ஆவது பாடலையும் இயற்றியுள்ளார்.

 

கரிகால் சோழன்

தமிழ் நாட்டை ஆட்சி புரிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் மிகவும் சிறந்தவனாகக் கருதப்படுபவன் கரிகாலன்.  அவன் ஆட்சிக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியன்[4] தம் நூலில் கூறுகிறார்.  அவன் திருமாவளவன், கரிகால் வளவன், கரிகால் பெருவளத்தான் என்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டான்.  அவன் சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்ற சோழ மன்னனின் மகன்.

 

            கரிகாலன் சிறுவனாக இருந்த பொழுது அவன் தந்தையின் பகைவர்கள் அவன் வசித்த அரண்மனைக்குத் தீ வைத்தனர்.  அத்தீயிலிருந்து அவனை அவன் மாமன் இரும்பிடர்த்தலையார் காப்பாற்றியதாகவும், அரண்மனையிலிருந்து தப்பிய பொழுது அவன் கால் தீயில் கருகிக் கருமை நிறமானதால் அவன் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகிறது.

            கரிகாலனின் தந்தையின் மரணத்திற்குப் பிறகு சோழ நாட்டில் மன்னன் இல்லாத நிலை எழுந்தது.  நாட்டை ஆட்சி செய்வதற்கு மன்னன் இல்லையென்றால் அரண்மனை யானை யாருக்கு மாலையைச் சூட்டுகிறதோ அவரை மன்னராக ஏற்றுக் கொள்வது சோழ நாட்டில் நிலவிய வழக்கம்.  அவ்வழக்கத்திற்கேற்ப, அரண்மனை யானை கரிகாலனுக்கு மாலையை அணிவித்ததால் அவன் சோழ நாட்டிற்கு மன்னன் ஆனான் என்று ஒருகதை உள்ளது.

            கரிகாலன் ஒரு சிறந்த மன்னன் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த வீரனாகவும் விளங்கினான்.  வெண்ணி ( தஞ்சாவூருக்கு 15 கல் தூரத்தில் உள்ள ஓரூர்) என்ற ஊரில் இரண்டு போர்களில் வெற்றி கண்டான்.  முதற்போரில் கரிகாலன் சேர மன்னன் பெருஞ்சேரலாதனை வென்றான்.  அப்போரில், பாண்டியனும் வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு குறுநிலமன்னர்களும் சேரனுக்கு உதவியாகப் போர் புரிந்தார்கள்.  அவர்கள் அனைவரையும் கரிகாலன் வென்றான்.  போரில் தோல்வியுற்ற பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.  வெண்ணியில் நடைபெற்ற மற்றொரு போரில் கரிகாலன் வெற்றி அடைந்த பிறகு தமிழகம் முழுவதையும் தன் ஆட்சிக்கு உள்ளாக்கினான்.  வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடை பெற்ற போரில் ஒன்பது அரசர்களை வென்றான்.

            கரிகாலனிடம் ஒப்புயர்வற்ற கப்பற்படை இருந்தது.  அவன் தன் கப்பற்படையின் உதவியோடு இலங்கை மன்னனை வென்று அங்கிருந்து பலரைக் கைது செய்து தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்து காவிரிக்கரையைச் செப்பனிடுவதற்குப் பயன்படுத்தினான்.  காவிரியில் கல்லணையைக் கட்டி உழவர்களுக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கு வழி வகுத்தான்.

            கரிகாலன் பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தை ஆட்சி புரிந்தான்.  அவன் இமயம்வரை சென்று இடையிலுள்ள மன்னர்களை வென்றான் என்றும் கூறப்படுகிறது.  சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, காஞ்சிபுராணம் ஆகிய நூல்களில் அவனைப் பற்றிய பல அரிய செய்திகள் உள்ளன.  பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் புகழ்ந்து பாடப்பட்டிருக்கும் கரிகால் வளவன் முடத்தாமக் கண்ணியார் இயற்றிய பொருநராற்றுப்படை என்ற பாடலுக்கும் பாட்டுடைத் தலைவன்  என்பது குறிப்பிடத்தக்கது. 

பட்டினப்பாலையைப் பாடியதற்காக, சோழ மன்னன் கரிகாலன் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்குப் பரிசாகப் பதினாறு நூறாயிரம் பொன் கொடுத்தான் என்று கலிங்கத்துபரணி[5] கூறுகிறது.

 



[1] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் 5

[2] மலைபடுகடாம் என்ற பாடல் கூத்தர்களை ஆற்றுப்படுத்துவதால், அது ஆற்றுப்படை வகையைச் சார்ந்ததுதான். அதற்கு மற்றொரு பெயர் கூத்தராற்றுப்படை.

[3] வள்ளல் ஒருவரிடம் தன் வறுமையைப் போக்கும் வளங்களைப் பெற்றுவந்த ஒருவர். கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலியோரை அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று தொல்காப்பியம் கூறுகிறது.

[4]. N. Subramanian, Social And Cultural History of Tamilnad ( to A.D. 1336) page 304

[5]. பொ. வே. சோமசுந்தரனார், பட்டினப்பாலை, பக்கம் 13

Comments

Popular posts from this blog

பட்டினப்பாலை - மூலம்

பட்டினப்பாலை - பொருட்சுருக்கம்