பட்டினப்பாலை - உரை

                                                                பட்டினப்பாலை – மூலமும் உரையும்

 

காவிரியின் சிறப்பு


வசை இல் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி,
வான் பொய்ப்பினும், தான் பொய்யா,                 5

மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்

 அருஞ்சொற்பொருள்:                        

1. வசை = குற்றம்; வயங்குதல் = விளங்குதல்; வெண்மீன் = வெள்ளியாகிய மீன்         (சுக்கிரன்)

 2. ஏகினும் = சென்றாலும்

 3. தற்பாடிய = தன்னைப் பாடிய வானம்பாடி (வானம்பாடி வானத்தை நோக்கிப் பாடுவதால் தற்பாடிய என்றனர்)

 4. புள் = பறவை; தேம்ப = வருந்த

 6. தலைய = தோன்றிய

 7. புனல் = நீர்; கொழிக்கும் = சேர்க்கும்

 

பதவுரை:
1. வசை இல் புகழ் வயங்கு வெண்மீன் = குற்றம் இல்லாத புகழையுடைய வெள்ளி என்று அழைக்கப்படும் கோள் (சுக்கிரன்)


2. திசை திரிந்து தெற்கு ஏகினும் = தான் இருக்கும் வடதிசையில் இல்லாமல் மாறுபட்டு, தெற்குத்திசையில் சென்றாலும்


3- 4. தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி = வானத்தை நோக்கிப் பாடும் வானம்பாடி என்னும் பறவை தான் உண்ணும் மழைத்துளி இல்லாமல் வருந்துமாறு தன் இயல்பிலிருந்து மாறுபட்டு


5. வான் பொய்ப்பினும், தான் பொய்யா = மேகம் மழை பெய்தலைத் தவிர்த்தாலும், தான் பொய்யாமல்


6. மலைத் தலைய கடல் காவிரி =குடகு மலையில் தோன்றிக் கடலில் சேரும் காவிரி

 

7. புனல் பரந்து பொன் கொழிக்கும் =நீர் பெருகி வளத்தைச் சேர்க்கும்

 

 

கருத்துரை:

குற்றமற்ற புகழுடன் விளங்குகின்ற வெள்ளி என்று அழைக்கப்படும் கோள் (சுக்கிரன்), தான் இருக்கும் வடதிசையில் இல்லாமல் மாறுபட்டு, தெற்குத்திசையில் சென்றாலும், வானத்தை நோக்கிப் பாடுகின்ற, மழைத்துளிகளை உணவாகவுடைய வானம்பாடி என்னும் பறவை மழைத்துளி இல்லாமல் வருந்துமாறு, மேகம் மழை பெய்தலைத் தவிர்த்தாலும், தான் பொய்யாமல், குடகு மலையில் தோன்றிக் கடலில் சேரும் காவிரி, நீர் பெருகி, சோழ நாட்டுக்கு வளம் சேர்க்கும்.

 

 

சிறப்புக் குறிப்பு:

சுக்கிரன் தெற்குத் திசையில் சென்றால் மழை பெய்யாது என்ற செய்தி, சங்க இலக்கியத்தில் வேறு சில நூல்களிலும் காணப்படுகிறது. உதாரணம்: இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் (புறநானூறு – 35); வெண்பொன் போகுறு காலை (புறநானூறு  - 389); வரும் வைகல் மீன் பிறழினும் (மதுரைக்காஞ்சி - 108)

 

வானம்பாடி என்ற பறவை நிலத்தில் உள்ள நீரைக் குடிக்காமல் வானத்திலிருந்து விழும் மழைத்துளிகளை மட்டும் குடிக்கும் இயல்புடையது.

 

மருத நிலவளம்


விளைவு அறா வியன் கழனி,
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின், கவின் வாடி,                       10

நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச் சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி,
கூட்டு நிழல், துயில் வதியும்                       15

கோள் தெங்கின், குலை வாழை,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,
இன மாவின், இணர்ப் பெண்ணை,
முதல் சேம்பின், முளை இஞ்சி

 

அருஞ்சொற்பொருள்:

8. அறா = மாறாத; வியன் = அகன்ற; கழனி = வயல்

 

9. கார் = பசுமை; கமழ்தல் = மணத்தல்

 

10. தெறுதல் = சுடுதல்; கவின் = அழகு

 

11. செறு = வயல்

 

12.  சாம்புதல் = வாடுதல் ; ஆங்கண் =அவ்விடத்து

 

13. அருந்தல் = உண்டல்

 

14. மோடு = வயிறு

 

15. கூடு = நெற்கூடு (குதிர்)

 

16. கோள் =குலை; தெங்கு = தென்னை

 

17. கமுகு =பாக்குமரம்

 

18. இணர் =குலை; பெண்ணை = பனைமரம்

 

19. சேம்பு = ஒருவகைச் செடி

 

பதவுரை:

8. விளைவு அறா வியன் கழனி = விளைச்சல் மாறாத அகன்ற வயல்களில்


9 – 12. கார்க் கரும்பின் கமழ் ஆலைத் தீத் தெறுவின், கவின் வாடி நீர்ச் செறுவின் நீள் நெய்தல் பூச் சாம்பும் புலத்து ஆங்கண் = பசுமையான கரும்பின் மணக்கின்ற பாகைக் காய்ச்சும் ஆலைகளில் இருந்து வரும் நெருப்பின் சூட்டினாலும் புகையாலும் நெல்வயலில் வளர்ந்த நீண்ட நெய்தல் மலர்கள் அழகிழந்து வாடும். அங்கு,


 13- 15
காய்ச் செந்நெல் கதிர் அருந்து மோட்டு எருமை முழுக் குழவி, கூட்டு நிழல், துயில் வதியும் = காய்ந்த செந்நெல்லின் கதிரைத் தின்று, வயிறு பெருத்த எருமைகளின் முதிர்ந்த கன்றுகள் நெற்குதிர்களின் நிழலில் உறங்கும். 

16.
கோள் தெங்கின், குலை வாழை = குலைகளையுடைய தென்னையும், குலைவாழைத் தாரையுடைய வாழையும்

 

17. காய்க் கமுகின், கமழ் மஞ்சள் = காய்களையுடைய பாக்குமரங்களும், மணம் மிகுந்த மஞ்சள் செடிகளும்

 

 18. இன மாவின், இணர்ப் பெண்ணை = பல விதமான மாமரங்களும், குலைகளையுடைய பனை மரங்களும்

 

19. முதல் சேம்பின், முளை இஞ்சி = கிழங்கையுடைய சேம்பும் முளையையுடைய இஞ்சிச் செடிகளும்

 

கருத்துரை: விளைச்சல் மாறாத அகன்ற வயல்களில் பசுமையான கரும்பின் மணக்கின்ற பாகைக் காய்ச்சும் ஆலைகளில் இருந்து வரும் நெருப்பின் சூட்டினாலும் புகையாலும் நெல்வயலில் வளர்ந்த நீண்ட நெய்தல் மலர்கள் அழகிழந்து வாடும். அங்கு,
 
காய்ந்த செந்நெல்லின் கதிரைத் தின்று, வயிறு பெருத்த எருமைகளின் முதிர்ந்த கன்றுகள் நெற்குதிர்களின் நிழலில் உறங்கும்.  குலைகளையுடைய தென்னையும், வாழையும், பனை மரங்களும், காய்களையுடைய பாக்குமரங்களும், மணம் மிகுந்த மஞ்சள் செடிகளும், பல விதமான மாமரங்களும், கிழங்கையுடைய சேம்பும், முளையையுடைய இஞ்சிச் செடிகளும் மருத நிலங்களில் நிறைந்து இருக்கும்.

 

காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பு

 

அகல் நகர் வியல் முற்றத்து,                                   20

சுடர் நுதல், மட நோக்கின்,
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும்                25

விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்து,

குறும் பல் ஊர் நெடுஞ் சோணாட்டு

அருஞ்சொற்பொருள்:

20. அகல் = அகன்ற; நகர் = வீடு, வியல் = பரந்த

 

22. உணங்கல் = வற்றல்; உணா = உணவு; கவர்தல் = தின்னுதல்

 

23. புரவி = குதிரை

 

27. பாக்கம் = பட்டினம்

 

28. சோணாடு = சோழ நாடு

 

பதவுரை:

20. அகல் நகர் வியல் முற்றத்து = செல்வம் மிக்க வீடுகளின் அகன்ற முற்றத்தில்

 

21-23. சுடர் நுதல், மட நோக்கின்,நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும் கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை = ஒளியுடைய நெற்றியும், மடப்பம் பொருந்திய பார்வையும் உடைய மகளிர், உலருகின்ற நெல்லைத் தின்னுங் கோழிகளை விரட்டுவதற்காக எறிந்த அவர்கள் அணிந்திருந்த வளைந்த சுற்றுக்களையுடைய கனத்த மகரக்குழைகள்


24 – 25. பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும், முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும் = பொன்னாலான பூண்களை அணிந்த கால்களையுடைய சிறுவர்கள் குதிரை இல்லாமல் தம் கையால் உருட்டும் மூன்று உருளைகளையுடைய சிறு தேர்களின்முன் விழுந்து அவர்கள் செலுத்தும் வண்டியை ஓடவிடாமல் தடுக்கும்.

 

26-28. விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா, கொழும் பல் குடிச் செழும் பாக்கத்து, குறும் பல் ஊர் நெடுஞ் சோணாட்டு = விலங்குகளால் உண்டாகும் பகையைத் தவிர மனம் கலங்குவதற்குக் காரணமான வேறு எந்தப் பகையும் அறியாத பெரிய பல குடிகளையும் செழிப்பும் உடைய கடற்கரை ஊர்களையும் ஒன்றுக்கொன்று
நெருங்கி இருக்கும் பல ஊர்களையும் கொண்டது பரந்து நீண்ட சோழநாடு.

 

கருத்துரை:

செல்வம் மிக்க வீடுகளின் அகன்ற முற்றத்தில், ஒளியுடைய நெற்றியும் மடப்பம் பொருந்திய பார்வையும் உடைய மகளிர், உலருகின்ற நெல்லைத் தின்னுங் கோழிகளை விரட்டுவதற்காக எறிந்த அவர்கள் அணிந்திருந்த வளைந்த சுற்றுக்களையுடைய கனத்த மகரக்குழைகள், பொன்னாலான பூண்களை அணிந்த கால்களையுடைய சிறுவர்கள் குதிரை இல்லாமல் தம் கையால் உருட்டும் மூன்று உருளைகளையுடைய சிறு தேர்களின்முன் விழுந்து அவர்கள் செலுத்தும் வண்டியை ஓடவிடாமல் தடுக்கும்.  விலங்குகளால் உண்டாகும் பகையைத் தவிர, மனம் கலங்குவதற்குக் காரணமான வேறு எந்தப் பகையும் அறியாத பெரிய பல குடிகளையும், செழிப்புடைய கடற்கரை ஊர்களையும், ஒன்றுக்கொன்று நெருங்கி இருக்கும் பல ஊர்களையும் கொண்டது பரந்து நீண்ட சோழ நாடு.

 

காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள தோட்டங்களும்,

பூம்பொழில்களும், பொய்கைகளும், நீர்நிலைகளும்


வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல் வாய்ப் பஃறி,                                             30

பணை நிலைப் புரவியின், அணை முதல் பிணிக்கும்
கழி சூழ் படப்பை, கலி யாணர்ப்,
பொழில் புறவின் பூந்தண்டலை,
மழை நீங்கிய மா விசும்பில்
மதி சேர்ந்த மக வெண் மீன்                                                           35

உரு கெழு திறல் உயர் கோட்டத்து,
முருகு அமர் பூ முரண் கிடக்கை
வரி அணி சுடர், வான் பொய்கை,
இரு காமத்து இணை ஏரி,

அருஞ்சொற்பொருள்:

29. கொள்ளை = விலை; சாற்றி = கூறி

 

30. வல்வாய் = வலிய இடம்; பஃறி = படகு

 

31. பணை = குதிரை லாயம்; அணைமுதல் = சார்ந்த முளை; பிணிக்கும் = கட்டும்

 

32. கழி =உப்பங்கழி; படப்பை = தோட்டம்; கலி = செருக்கு

 

33. புறவு = தோப்பு; பூந்தண்டலை =பூஞ்சோலை

 

36. உரு =பருமை; திறல் = ஒளி; கோட்டம் = கோயில்

 

37. முருகு = அழகு, மணம்; கிடக்கை = நிலப் பரப்பு

 

38. வரிதல் = சித்திரமெழுதுதல்; வரி = ஓவியம்

 

39. காமம் = காமவின்பம்

 

பதவுரை:

29-30. வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல் வாய்ப் பஃறி = வெள்ளை உப்பின் விலையைக் கூறி, நெல்லைக் கொண்டுவந்த வலிய படகுகள்

31.
பணை நிலைப் புரவியின், அணை முதல் பிணிக்கும் = குதிரை லாயத்தில்  வரிசையாக நிற்கும் குதிரைகளைக் கட்டுவதைப் போல் அங்குள்ள தறிகளில் கட்டப்பட்டிருக்கும்,

 

32- 33.  கழி சூழ் படப்பை, கலி யாணர்ப் பொழில் புறவின் பூந்தண்டலை = உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்களும், மனச்செருக்கு எழுவதற்குக் காரணமாமான புதுவருவாயையுடைய தோப்புகளுக்குப் புறத்தே உள்ள பூஞ்சோலைகளும்

 

34 - 36. மழை நீங்கிய மா விசும்பில் மதி சேர்ந்த மக வெண் மீன் உரு கெழு திறல் உயர் கோட்டத்து = மேகங்கள் இல்லாத அகன்ற வானில், மகம் என்னும் வெண்ணிறமான விண்மீன், பெரிய வடிவுடைய ஒளிபொருந்திய உயர்ந்த கோயிலையும்,


37. முருகு அமர் பூ முரண் கிடக்கை = மணம் பொருந்திய பலநிறமான மலர்கள் நிறைந்த  இடம்


38. வரி அணி சுடர், வான் பொய்கை = ஓவியத்தைப் போல்  அழகாக விளங்கும் நல்ல ஒளியுடைய பொய்கையும்


39. இரு காமத்து இணை ஏரி = இம்மையிலும் மறுமையிலும் காமவின்பத்தைக் கொடுக்கும்  இரண்டு நீர்நிலைகளையும்

கருத்துரை:

பல ஊர்களுக்கும் சென்று, வெள்ளை உப்பின் விலையைக் கூறி, நெல்லை வாங்கிக்கொண்டுவந்த வலிய படகுகள் லாயத்தில், வரிசையாக நிற்கும் குதிரைகளைக் கட்டுவதைப் போல் அங்குள்ள தறிகளில் கட்டப்பட்டிருக்கும்.  உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்களும், மனச்செருக்கு எழுவதற்குக் காரணமாமான புதுவருவாயையுடைய தோப்புகளுக்குப் புறத்தே பூஞ்சோலைகளும் உடையது காவிர்ப்பூம்பட்டினம். மேகம் இல்லாத அகன்ற வானில், நிலவைச் சேர்ந்த மகம் என்ற விண்மீனைப் போன்று, பெரிய வடிவுடைய ஒளிபொருந்திய  உயர்ந்த கோயிலுக்கு அருகில் மணம் பொருந்திய, பலநிறமான மலர்கள் நிறைய மலர்ந்திருக்கும்.  ஓவியத்தைப் போல் அழகாக விளங்கும் ஒளியுடைய சிறப்பான பொய்கைகளும், இம்மையிலும் மறுமையிலும் அவற்றில் நீராடுபவர்களுக்குக் காமவின்பம் தருகின்ற இரணடு நீர்நிலைகளும் உடையது காவிரிப்பூம்பட்டினம்.

 

சிறப்புக் குறிப்பு:

காவிரிப்பூம்பட்டினத்தில் சோமகுண்டம் சூரியகுண்டம் என்று இரண்டு நீர்நிலைகள் இருந்ததாகவும் அவற்றில் நீராடியவர்கள் இம்மையிலும் மறுமையிலும் காம இன்பத்தை அனுபவிப்பார்கள் என்றும் சிலப்பதிகாரத்தில்[1]  கூறப்பட்டிருப்பதைப் பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் சுட்டிக்காட்டி, ”இரு காமத்து இணை ஏரி” என்பது அவற்றைக் குறிப்பதாகக் கூறுகிறார்[2].

 

காவிரிப்பூம்பட்டினத்து அட்டில் சாலைகள்

 

புலிப் பொறிப் போர்க் கதவின்                              40

திருத் துஞ்சும் திண் காப்பின்,
புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி,                                   45

ஏறு பொரச் சேறாகி,
தேர் ஓடத் துகள் கெழுமி,
நீறு ஆடிய களிறு போல,
வேறுபட்ட வினை ஓவத்து
வெண் கோயில் மாசு ஊட்டும்;                              50

 

அருஞ்சொற்பொருள்:

40. புலிப்பொறி = புலிச்சின்னம்

 

41. திரு = திருமகள் (செல்வம்); துஞ்சும் = தங்கும்; திண் = வலிமையான; காப்பு = காவல்

 

43. அகன் = அகன்ற; அட்டில் = சமையல் அறை (அடுக்களை)

 

44. கொழுங் கஞ்சி = சத்துள்ள கஞ்சி

 

45. யாறு = ஆறு

 

46. ஏறு = காளைகள்; பொருதல் = போரிடுதல்

 

47. துகள் = தூசு; கெழுமி = பொருந்தி

 

49. ஓவம் = ஓவியம்

 

50. கோயில் = அரண்மனை

 

பதவுரை:

40-41. புலிப் பொறிப் போர்க் கதவின் திருத் துஞ்சும் திண் காப்பின் = புலிச் சின்னம் பொறித்த பலகைகள் பொருந்திய, திருமகள் தங்கும் கதவுகளும் வலிமையான காவலும்


42-43. புகழ் நிலைஇய மொழி வளர அறம் நிலைஇய அகன் அட்டில் = புகழ் நிலைபெறவும், புகழுரைகள் எங்கும் பரவவும், அறம் நிலைக்கவும் அகன்ற சமையல் அறைகளில்

 

44-45. சோறு வாக்கிய கொழுங் கஞ்சி யாறு போலப் பரந்து ஒழுகி = சோற்றை வடித்தலால்  ஒழுகிய கஞ்சி, ஆற்று வெள்ளம் போல் பரந்து ஒழுகி

 

46. ஏறு பொரச் சேறாகி = காளைகள் சண்டை இடுவதால் சேறாகி

 

47. தேர் ஓடத் துகள் கெழுமி = அந்தச் சேற்றில் தேர்கள் ஓடுவதால் புழுதி நிறைந்து


48-50. நீறு ஆடிய களிறு போல வேறுபட்ட வினை ஓவத்து வெண் கோயில் மாசு ஊட்டும்  = பல்வேறு ஓவியங்கள் தீட்டப்பட்டு, வெண்ணிறமாக இருந்த அரண்மனை புழுதியைப் பூசிக்கொண்ட யானைபோல் காட்சி அளிக்கும்

 

கருத்துரை:

காவிரிபூம்பட்டினத்தின் புகழ் நிலைபெறவும், புகழுரைகள் எங்கும் பரவவும், அறம் நிலைக்கவும், புலிச் சின்னம் பொறித்த பலகைகள் பொருந்திய, திருமகள் தங்கும் கதவுகளும், வலிமையான காவலும் உடைய, அகன்ற சமையல் அறைகள் இருந்தன. அங்குச் சோற்றை வடித்தலால் ஒழுகிய கஞ்சி, ஆற்று வெள்ளம் போல் பரவிய இடங்களில் காளைகள் சண்டை இடுவதால், அந்த இடங்கள் சேறாகின. அந்தச் சேற்றில் தேர்கள் ஓடுவதால் புழுதி நிறைந்து, பல்வேறு ஓவியங்கள் தீட்டப்பட்டு, வெண்ணிறமாக இருந்த அரண்மனை புழுதியைப் பூசிக்கொண்ட யானைபோல் காட்சி அளிக்கும்.

 

மாட்டுக்கொட்டிலும், தவப்பள்ளியும், வேள்விச்சாலையும்


தண் கேணித் தகை முற்றத்து,
பகட்டு எருத்தின் பல சாலை;
தவப் பள்ளி; தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ, குயில் தம்                           55

மா இரும் பெடையோடு இரியல் போகி,
பூதம் காக்கும் புகல் அருங் கடி நகர்,
தூது உண் அம் புறவொடு துச்சில் சேக்கும்

அருஞ்சொற்பொருள்:

51. தண் = குளிர்ச்சி; கேணி = சிறு குளம்; தகை =உள்ளடக்கிய

 

52. பகடு = வலிமை; சாலை = மாட்டுக் கொட்டில்

 

53. தவப்பள்ளி =தவம் செய்யும் இடம் ; கா = சோலை

 

54. அவிர் = ஒளி; அங்கி = தீ ; வேட்கும் = விரும்பும்

 

55. ஆவுதி = வேள்வியில் இடுவது; முனைஇ = வெறுத்து

 

56. பெடை = பெண் பறவை ; இரியல் = நிலை குலைதல்

 

58. தூது =  சிறிய கற்கள்; துச்சில் = ஒதுக்கிடம்;  சேக்கும் = தங்கும்

 

பதவுரை:

51 - 52. தண் கேணித் தகை முற்றத்து, பகட்டு எருத்தின் பல சாலை = குளிர்ந்த சிறு குளங்களை உள்ளடக்கிய முற்றத்தையும், வலிய எருதுகளுக்கு வைக்கோலிடும் மாட்டுக்கொட்டில்களும்


 53. தவப் பள்ளி தாழ் காவின் = தவம் செய்யும் இடங்களையும் தழைத்துத் தாழ்ந்து வளர்ந்த மரங்களையுமுடைய சோலைகளில்


54 - 56. அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும் புகை முனைஇ, குயில் தம்  மா இரும் பெடையோடு இரியல் போகி = விளங்குகின்ற சடையையுடைய முனிவர்கள் தீயில் பொருட்களை இட்டு வேள்வி செய்வதால் தோன்றிய மணமுள்ள புகையை வெறுத்து, ஆண்குயில் தன்னுடைய கருமையும் அழகும் உள்ள பெண்குயிலோடு, நிலைகுலைந்து அவ்விடத்தை விட்டு நீங்கி


57. பூதம் காக்கும் புகல் அருங் கடி நகர் = பூதம் காக்கும், அச்சத்தைத் தரும் காவலுடைய நகரத்திற்குச் சென்று


58. தூது உண் அம் புறவொடு துச்சில் சேக்கும் = உணவோடு சிறு கற்களையும்  தின்னும் அழகிய புறாக்களோடு தாமும் ஒதுக்கிடத்தில் தங்கும்.

 

கருத்துரை:

குளிர்ந்த சிறு குளங்களை உள்ளடக்கிய முற்றமும், வலிய எருதுகளுக்கு வைக்கோலிடும் மாட்டுக்கொட்டில்களும், சமணரும் பௌத்தரும்  தவம் செய்யும் இடங்களில்,  தழைத்துத் தாழ்ந்து வளர்ந்த மரங்களுடைய சோலைகளில், விளங்குகின்ற சடையையுடைய முனிவர்கள் தீயில் பொருட்களை இட்டு வேள்வி செய்வதால் தோன்றிய மணமுள்ள புகையை வெறுத்து, ஆண்குயில் தன்னுடைய கருமையும் அழகும் உள்ள பெண்குயிலோடு, நிலைகுலைந்து  அவ்விடத்தை விட்டு நீங்கி
பூதம் காக்கும், அச்சத்தைத் தரும் காவலுடைய நகரத்திற்குச் சென்று (காவிரிப்பூம்பட்டினத்திற்குச் சென்று), உணவோடு சிறு கற்களையும் தின்னும் அழகிய புறாக்களோடு தாமும் ஒதுக்கிடத்தில் தங்கும்.

 

சிறப்புக் குறிப்பு:

            பறவைகளுக்குப் பற்கள் இல்லை. அதனால், அவை உணவை மென்று தின்னாமல், முழுமையாக விழுங்குகின்றன. பறவைகளின் குடற் பையில் உணவை அரைக்கும் உறுப்பு (gizzard) இருக்கிறது[3]. தாம் விழுங்கும் உணவோடு சேர்த்துப் பறவைகள் சிறிய கற்களையும் விழுங்குகின்றன. அந்த உறுப்பில் உள்ள கற்கள் ஒன்றோடு ஒன்று உரசும்பொழுது, அவற்றோடு சேர்ந்த உணவு அரைபடுகிறது. அவ்வாறு அரைக்கப்பட்ட உணவு, பறவைகளுக்குச் செறிப்பதற்கு எளிதாக இருக்கிறது.   கூழாங்கற்களின் உதவியால் தாம் விழுங்கும் உணவை அரைத்து உண்ணும் பறவகளில் புறாவும் ஒன்று.

 

விளையாட்டுக் களத்தில் வீரர்களின் போர்


முது மரத்த முரண் களரி;
வரி மணல் அகன் திட்டை,                                      60

இருங் கிளை, இனன் ஒக்கல்,
கருந் தொழில், கலி மாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும்,
வயல் ஆமைப் புழுக்கு உண்டும்,
வறள் அடும்பின் மலர் மலைந்தும்                        65

புனல் ஆம்பல் பூச் சூடியும்,
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்
நாள்மீன் விராஅய கோள்மீன் போல
மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ,
கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டி,         70

பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது,
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்,
கல் எறியும் கவண் வெரீஇப்,
புள் இரியும் புகர்ப் போந்தை

 

அருஞ்சொற்பொருள்:

59. முது மரம் = பழைய மரம் (முதிர்ந்த மரம்); முரண் = வலிமை; களரி = போர்க்களம் (சண்டை போடும் இடம்)

 

60. வரி மணல் = காற்றால் வரிவரியாகக் குவிக்கப்பட்ட மணல்; அகன் = அகன்ற; திட்டை = மேடு

 

61. இருங்கிளை = பெரிய கூட்டமாக உறவினர்கள்; இனன் ஒக்கல் = இனத்தைச் சார்ந்த சுற்றத்தார்;

 

62, கருமை = வலிமை; கலி = செருக்கு

 

63. இறவு = இறாமீன்

 

65. வறள் = வறண்ட; அடும்பு = அடப்பங்கொடி

 

66. புனல் = நீர்; ஆம்பல் = அல்லி

 

67. ஏர்பு = எழுச்சி

 

69. குழீஇ = கூடி

 

71.புறக்கொடாஅது = பின்வாங்காமல்

 

72. இரு = பெரிய; செரு = போர்; மொய்ம்பு = வலிமை

 

73. கவண் = கல்லெறியும் கருவி; வெரீஇ = அஞ்சி

 

74.  புள் = பறவைகள்; இரியும் =நீங்கும் (விலகும்)  ; போந்தை = பனைமரம்

 

பதவுரை:

59. முது மரத்த முரண் களரி = முதிர்ந்த மரங்களையுடைய போர்க்களத்தில்


60. வரி மணல் அகன் திட்டை = காற்றால் வரிவரியாகக் குவிக்கப்பட்ட மணலுடைய அகன்ற மேடுகளில்


61 - 62.
இருங் கிளை, இனன் ஒக்கல் கருந் தொழில், கலி மாக்கள் = பெரிய கூட்டமாக உறவினரும்,  ஒரே இனத்தைச் சார்ந்த வலிமையான தொழில் புரியும் சுற்றத்தாருமாகிய செருக்குடைய மறவர்களுள்


63. கடல் இறவின் சூடு தின்றும் = ஒருசாரார் கடலில் உள்ள இறாமீனின் தசையைச் சுட்டுத் தின்றும்


64. வயல் ஆமைப் புழுக்கு உண்டும் = மற்றொருசாரார் வயலில் உள்ள ஆமையின் அவித்த இறைச்சியைத் தின்றும்


65. வறள் அடும்பின் மலர் மலைந்தும் = ஒருசாரார் வறண்ட மணலில் படர்ந்த அடப்பம் பூவைத் தலையில் சூடியும்

 

66. புனல் ஆம்பல் பூச் சூடியும் = வேறுசிலர் நீரில் உள்ள அல்லிப்பூவைச் சூடியும்

 

67 - 68. நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் நாள்மீன் விராஅய கோள்மீன் போல = நீலநிறத்தையுடைய வானத்தில் வலமாக எழுந்து திரியும் நட்சத்திரங்களுடன் கலந்த கோள்களைப் போல்

 

69. மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ = அகன்ற இடத்தையுடைய மன்றத்தில் பலரோடும் கூடி


70. கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டி = கையாலும் கருவியாலும் உடலில் படுமாறு தீண்டி

 

71. பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது = அங்குத் தோன்றிய பெருஞ்சினத்தால் ஒருவருக்கொருவர் பின்வாங்காமல்

 

72. இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர் = பெரிதாகப் போரிட்டுத் தங்கள் வலிமையைக் காட்டி


73. கல் எறியும் கவண் வெரீஇப் = கவணால் எறிந்த கல்லுக்கு அஞ்சி


74. புள் இரியும் புகர்ப் போந்தை = புள்ளிகளையுடைய பறவைகள் பனைமரத்தை விட்டு நீங்கும்.

 

கருத்துரை:

முதிர்ந்த மரங்களையுடைய போர்க்களத்தில், காற்றால் வரிவரியாகக் குவிக்கப்பட்ட மணலுடைய அகன்ற மேடுகளில், பெரிய கூட்டமாக உறவினரும், ஒரே இனத்தைச் சார்ந்த சுற்றத்தாருமாகிய வலிமையான தொழில் புரியும் செருக்குடைய மறவர்களுள் ஒருசாரார் கடலில் உள்ள இறாமீனின் தசையைச் சுட்டுத் தின்பர். மற்றொருசாரார் வயலில் உள்ள ஆமையின் அவித்த இறைச்சியைத் தின்பர். அங்கு, ஒருசாரார் வறண்ட மணலில் படர்ந்த அடப்பம் பூவைத் தலையில் சூடியும், வேறுசிலர் நீரில் உள்ள அல்லிப்பூவைச் சூடியும், நீலநிறத்தையுடைய வானத்தில் வலமாக எழுந்து திரியும் நட்சத்திரங்களுடன் கலந்த கோள்களைப் போல் அகன்ற இடத்தையுடைய மன்றத்தில் பலரோடும் கூடிச் சண்டையிடுவர்.  அவர்கள் கையாலும் கருவியாலும் உடலில் படுமாறு தீண்டிப் போர் செய்த பொழுது, அங்குத் தோன்றிய பெருஞ்சினத்தால் ஒருவருக்கொருவர் பின்வாங்காமல் பெரிதாகப் போரிட்டு தங்கள் வலிமையைக் காட்டி, அவர்கள்  கவணால் எறிந்த கல்லுக்கு அஞ்சிப் புள்ளிகளையுடைய பறவைகள் பனைமரத்தை விட்டு நீங்கும்.

 

காவிரிப்பூம்பட்டினத்தில் சேரி


பறழ்ப் பன்றி, பல் கோழி,                           75

உறைக் கிணற்றுப் புறச் சேரி,
மேழகத் தகரொடு சிவல் விளையாட

அருஞ்சொற்பொருள்:

75. பறழ் = குட்டி

 

76. உறைக் கிணறு = மண்ணால் வளைந்து சுடப்பட்ட வளைந்த விளிம்புகளையுடைய கிணறு ; சேரி =குடியிருப்பு

 

77. மேழகம் = ஆடு; தகர் = கிடாய்; சிவல் =கௌதாரி

 

பதவுரை:

75. பறழ்ப் பன்றி, பல் கோழி = குட்டிகளையுடைய பன்றிகளும், பலவகையான கோழிகளும்

 

76. உறைக் கிணற்றுப் புறச் சேரி = உறைக்கிணறுகளையுடைய ஊர்ப்புறத்தே உள்ள குடியிருப்புகளில்


77. மேழகத் தகரொடு சிவல் விளையாட = ஆட்டுக்கிடாய்களோடு கௌதாரிகளும் விளையாடிக்கொண்டிருக்கும்.

 

கருத்துரை:

குட்டிகளையுடைய பன்றிகளும், பலவகையான கோழிகளும் உறைக்கிணறுகள் உள்ள  ஊர்ப்புறத்தே உள்ள குடியிருப்புகளில் ஆட்டுக்கிடாய்களோடு கௌதாரிகளும் காவிரிப்பூம்பட்டினத்தின் சேரிகளில் விளையாடிக்கொண்டிருக்கும்.

 

 

பரதவர்களின் குடியிருப்பு


கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி,
நடு கல்லின் அரண் போல,
நெடுந் தூண்டிலில் காழ் சேர்த்திய                       80

குறுங் கூரைக் குடி நாப்பண்;
நிலவு அடைந்த இருள் போல,
வலை உணங்கும் மணல் முன்றில்

 

அருஞ்சொற்பொருள்:

78. கிடுகு = கேடயம்; நிரைதல் = வரிசையாதல்; எஃகு = வேல்

 

80. காழ் =கோல்

 

81. நாப்பண் = நடுவே

 

83. உணங்குதல்= உலர்தல்; முன்றில் = முற்றம்

 

பதவுரை:

78. கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி = கேடயங்களை வரிசையாக நட்டு வைத்த,

 

79. நடு கல்லின் அரண் போல = இறந்த வீரர்களுக்கு நடுகின்ற நடுகல்லுக்கு அரண் போல


80-81. நெடுந் தூண்டிலில் காழ் சேர்த்திய குறுங் கூரைக் குடி நாப்பண் = நெடிய தூண்டிலைச் சார்த்திய, குறுகிய கூரையையுடைய குடியிருப்பின் நடுவில்


82-83. நிலவு அடைந்த இருள் போல வலை உணங்கும் மணல் முன்றில் = நிலவின் நடுவே உள்ள இருளைப் போல மீனவர்களின் வலை கிடந்து உலரும் முற்றத்தையுடைய வீடுகள் 


கருத்துரை:

போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகின்ற நடுகல்லுக்குக் கேடயங்களை வரிசையாக நட்டு வைத்துச் செய்த வேலிபோல, நெடிய தூண்டிலைச் சார்த்திய, குறுகிய கூரையையுடைய குடியிருப்பின் நடுவில்,  நிலவில்  உள்ள இருளைப் போல பரதவர்களின் மீன் பிடிக்கும் வலை கிடந்து உலரும் மணல் நிறைந்த முற்றத்தை உடைய வீடுகள்  உள்ளன.

பரதவர்களின் வழிபாடும் செயல்களும்

வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த
வெண் கூதாளத்துத் தண் பூங் கோதையர்,                      85

சினைச் சுறவின் கோடு நட்டு,
மனைச் சேர்த்திய வல் அணங்கினான்,
மடல் தாழை மலர் மலைந்தும்;
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்;
புன் தலை இரும் பரதவர்                                                    90

பைந் தழை மா மகளிரொடு,
பாய் இரும் பனிக் கடல் வேட்டம் செல்லாது,
உவவு மடிந்து, உண்டு ஆடியும்;

 

அருஞ்சொற்பொருள்:

84. வீழ் = விழுது; தாள் = அடி

 

85. வெண் கூதாளம் = வெண்டாளி என்னும் ஒருவகைச் செடி

86. சினை = கருப்பம்; சுறவு = சுறா மீன்; கோடு = கொம்பு

 

87. வல் = வலிய; அணங்கு = தெய்வம்

 

88. மலைதல் = சூடுதல்

 

89. பிணர் = சருச்சரை (சொர சொரப்பான) ; பெண்ணை = பனை; பிழி = கள்; மாந்தி = அருந்தி

 

90. புன் தலை= சிவப்பு மயிருள்ள தலை; இரும் = கருமை; பரதவர் = நெய்தல் நிலமக்கள்

 

91. பை = பசுமை; மா = கருமை

 

92. பாய்தல் =  பரவுதல்; இரும் = பெரிய;வேட்டம் = விருப்பம்

 

93. உவவு = முழு நிலா நாள்; மடிதல் =முயற்சியறுதல்

 

பதவுரை:

84-85. வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்தவெண் கூதாளத்துத் தண் பூங் கோதையர் = விழுதையுடைய தாழையின் அடிப்பக்கத்தில் இருந்த வெண்டாளியின் குளிர்ந்த பூக்களால் செய்த மாலையையுடைய

 

86. சினைச் சுறவின் கோடு நட்டு = கருப்பமுற்ற சுறாமீனின் கொம்பை நட்டு  அதன்  பக்கத்தில்


87. மனைச் சேர்த்திய வல் அணங்கினான் = தம்  வீட்டில் உள்ள வலிமையான கடவுளுக்கு

 

88. மடல் தாழை மலர் மலைந்தும் = மடலையுடைய தாழையின் மலரைச் சூடியும்

 

89. பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும் = சொர சொரப்பான பனையின் கள்ளைப் பருகியும்

 

90-91. புன் தலை இரும் பரதவர்  பைந் தழை மா மகளிரொடு = சிவந்த முடியையுடைய கருமைநிறமுள்ள பரதவர் பசுமையான தழையை உடுத்திய கருமை நிறமுள்ள தம் மகளிருடன் கூடி


92-93. பாய் இரும் பனிக் கடல் வேட்டம் செல்லாது உவவு மடிந்து, உண்டு ஆடியும் = பரந்த பெரிய கடல்மீது மீன் பிடிக்கப் போவதற்கு விரும்பாமல், முழுநிலவு நாளன்று தாம் விரும்பும் உணவை உண்டு விளையாடுவர்.

 

கருத்துரை:

விழுதையுடைய தாழையின் அடிப்பக்கத்தில் இருந்த வெண்டாளியின் குளிர்ந்த பூக்களால் செய்த மாலையை அணிந்து, கருப்பமுற்ற சுறாமீனின் கொம்பை நட்டு, அதன் பக்கத்தில் தம் வீட்டில் உள்ள வலிமையான கடவுளுக்கு மடலையுடைய தாழையின் மலரைச் சூடி, சொர சொரப்பான பனையின் கள்ளைப் பருகி, சிவந்த முடியையுடைய கருமைநிறமுள்ள பரதவர் பசுமையான தழையை உடுத்திய கருமை நிறமுள்ள தம் மகளிருடன் கூடி, பரந்த பெரிய கடல்மீது மீன் பிடிக்கப் போவதற்கு விரும்பாமல், முழுநிலவு நாளன்று தாம் விரும்பும் உணவை உண்டு விளையாடுவர்.

 


காவிரி கடலில் கலக்கும் இடத்தில் விளையாட்டுகள்

 

புலவு மணல், பூங் கானல்,
மா மலை அணைந்த கொண்மூப் போலவும்,                  95

தாய் முலை தழுவிய குழவி போலவும்,
தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல்,
தீது நீங்க, கடல் ஆடியும்;
மாசு போக, புனல் படிந்தும்;                                               100

அலவன் ஆட்டியும்; உரவுத் திரை உழக்கியும்;
பாவை சூழ்ந்தும்; பல் பொறி மருண்டும்;
அகலாக் காதலொடு பகல் விளையாடி

பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்,
பொய்யா மரபின், பூ மலி பெருந் துறை, 105

அருஞ்சொற்பொருள்:

94. புலவு மணல் =புலால் நாற்றத்தையுடைய மணல் ; பூங் கானல் = பூக்களையுடைய கடற்கரை

 

95. மா = கரிய; அணைந்த = சேர்ந்த; கொண்மூ = மேகம்

 

97. தேறு நீர் = தெளிந்த நீர்; புணரி =கடல்; மணக்கும் = கலக்கும்

 

98. மலி = மிகுந்த ; ஓதம் =அலை

 

101. அலவன் =நண்டு; உரவு = வலிமை; திரை = அலை; உழக்குதல் = விளையாடுதல்

 

102. மருண்டும் = நுகர்ந்தும்

 

104. சீர் = சிறப்பு; துறக்கம் =  சுவர்க்கம்; ஏய்க்கும் = ஒத்திருக்கும்

 

105. மலிதல் = நிறைதல்

 

பதவுரை:

 94. புலவு மணல், பூங் கானல் = புலால் நாற்றத்தையுடைய மணலையும் பூக்களையுமுடைய கடற்கரையில்


95. மா மலை அணைந்த கொண்மூப் போலவும் = கரிய மலையைச் சார்ந்த மேகத்தைப் போலவும்


96. தாய் முலை தழுவிய குழவி போலவும் = தாயின் முலையைத் தழுவிய குழந்தை போலவும்


97-98. தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும் மலி ஓதத்து ஒலி கூடல் = தெளிந்த கடலோடு காவிரி கலக்கும்
மிக்க அலைகளின் ஒலியையுடைய புகார்முகத்தில் 


99. தீது நீங்க, கடல் ஆடியும் = தீவினை நீங்குவதற்காகக் கடலில் குளித்தும்


100. மாசு போக, புனல் படிந்தும் = உடலில் படிந்த உப்பைக் கழுவுவதற்காக நீரில் குளித்தும்

 

101. அலவன் ஆட்டியும்; உரவுத் திரை உழக்கியும் = நண்டுகளைப் பிடித்து ஆட்டியும் வலிய அலைகளில் விளையாடியும்


102. பாவை சூழ்ந்தும்; பல் பொறி மருண்டும் =
மணலால் பொம்மைகளைச் செய்தும், ஐம்புலன்களால் அடையக்கூடிய இன்பங்களை நுகர்ந்தும்,

 

103. அகலாக் காதலொடு பகல் விளையாடி = நீங்காத விருப்பத்துடன் பகல் முழுதும் விளையாடி

 

104.  பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும் = பெறுதற்கரிய தொன்மையான சிறப்புடைய சுவர்க்கத்தை ஒத்திருக்கும்


105. பொய்யா மரபின், பூ மலி பெருந் துறை = பொய்க்காத மரபையுடைய, பூக்கள் நிறைந்து காணப்படும் காவிரிப்பூம்பட்டினம்

கருத்துரை:
புலால் நாற்றத்தையுடைய மணலையும் பூக்களையுமுடைய கடற்கரையில்,
கரிய மலையைச் சார்ந்த மேகத்தைப் போலவும், தாயின் முலையைத் தழுவிய குழந்தை போலவும் தெளிந்த கடலோடு காவிரி கலக்கும்,
மிக்க அலைகளின் ஒலியையுடைய புகார்முகத்தில், தீவினை நீங்குவதற்காகக் கடலில் குளித்தும்,
உடலில் படிந்த உப்பைக் கழுவுவதற்காக நீரில் குளித்தும், நண்டுகளைப் பிடித்து ஆட்டியும் வலிய அலைகளில் விளையாடியும்,
மணலால் பொம்மைகளைச் செய்தும், ஐம்புலன்களால் அடையக்கூடிய இன்பங்களை எல்லாம் நுகர்ந்தும், நீங்காத விருப்பத்துடன் பகல் முழுதும் மக்கள் விளையாடினர்.  நீர்வளம் பொய்க்காத மரபோடு, பூக்கள் நிறைந்த காவிரிப்பூம்பட்டினம் தொன்மையான சிறப்புடைய சுவர்க்கத்தைப்போல் இருந்தது.

 

 

 

காவிரிப்பூம்பட்டினத்தில் இரவுக்கால நிகழ்ச்சிகள்



துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்,
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும்,                             110

நெடுங் கால் மாடத்து, ஒள் எரி நோக்கி,
கொடுந் திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும்,
பாடல் ஓர்த்தும், நாடகம் நயந்தும்,
வெண் நிலவின் பயன் துய்த்தும்,
கண் அடைஇய கடைக் கங்குலான்,                                  115

 

 அருஞ்சொற்பொருள்:

106. மடம் = இளமை

 

107. துகில் = நல்லாடை (இங்கு பருத்தி ஆடையக் குறிக்கிறது)

 

108. மட்டு = கள்

 

109. கண்ணி = மாலை

 

110. கோதை = மாலை

 

112. குரூஉ = நிறம்

 

113. ஓர்த்து =கேட்டு; நயத்தல் = விரும்புதல்

 

115. கண்ணடைத்தல் = தூங்குதல்; கங்குல் = இரவு

 

பதவுரை:

106. துணைப் புணர்ந்த மட மங்கையர் = தம் கணவரோடு கூடிய இளம்பெண்கள்


107. பட்டு நீக்கித் துகில் உடுத்தும் = தாம் முன்பு அணிந்திருந்த பட்டாடையை நீக்கிப் பருத்தி ஆடையை உடுத்தி,

 

108. மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் = கள் குடிப்பதைத் தவிர்த்து மது அருந்தி மகிழ்ந்தும்


109. மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் = கணவர் சூடிக்கொள்ளும் மாலையை மகளிர் சூடிக்கொண்டும்


110. மகளிர் கோதை மைந்தர் மலையவும், = மகளிர் அணியும் மாலையை கணவர் அணிந்துகொண்டும்

 

111-112.  நெடுங் கால் மாடத்து, ஒள் எரி நோக்கி கொடுந் திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும் = நெடிய தூண்களையுடைய மாடி வீடுகளில்  அணைந்துபோன விளக்குகளைத்  தவிர்த்து ஒளியுடன் எரிந்துகொண்டிருக்கும் விளக்குகளை வளைந்த படகுகளையுடையோர் எண்ணவும்,


113. பாடல் ஓர்த்தும், நாடகம் நயந்தும் = பாடல்களைக் கேட்டும், நாடகங்களை விரும்பிப் பார்த்தும்,


114. வெண் நிலவின் பயன் துய்த்தும் = வெண்ணிலவால் உண்டாகிய இன்பத்தை நுகர்ந்தும்


115. கண் அடைஇய கடைக் கங்குலான் = அயர்ந்து தூங்கும் இரவின் கடைசிப் பகுதியில்

 

 கருத்துரை:

தம் கணவரோடு கூடிய இளம்பெண்கள் தாம் முன்பு அணிந்திருந்த பட்டாடையை நீக்கிப் பருத்தி ஆடையை உடுத்தினர். கள் குடிப்பதைத் தவிர்த்து மது அருந்தி மகிழ்ந்திருந்தனர். மதுவுண்ட மயக்கத்தில், கணவர் சூடிக்கொள்ளும் மாலையை மகளிர் சூடிக்கொண்டனர்; மகளிர் அணியும் மாலையைக் கணவர் அணிந்துகொண்டனர்.

காலையில், வளைந்த படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற பரதவர், நெடிய தூண்களையுடைய மாடி வீடுகளில்  அணைந்துபோன விளக்குகள் போக எஞ்சியிருக்கும்   ஒளியுடன் எரிந்துகொண்டிருக்கும் விளக்குகளை  எண்ணுவர்.  காவிரிப்பூம்பட்டினத்தில் வாழும் ஒருசிலர், பாடல்களைக் கேட்டும், நாடகங்களை விரும்பிப் பார்த்தும் இன்புறுவர். வேறுசிலர், வெண்ணிலவால் உண்டாகிய இன்பத்தை நுகர்வர். இவ்வாறு இரவில் இன்பம் துய்த்தவர்கள் இரவின் கடைசிப்பகுதியில் (இரவு மூன்றுமணிமுதல் காலை ஆறுமணி வரை) கண் அயர்ந்து உறங்குவர்.

 

 


வரி வசூலிப்பவர்களின் தன்மை

 

மாஅ காவிரி மணம் கூட்டும்
தூ எக்கர்த் துயில் மடிந்து
வால் இணர் மடல் தாழை
வேல் ஆழி வியன் தெருவில்,
நல் இறைவன் பொருள் காக்கும்                           120

தொல் இசைத் தொழில் மாக்கள்,
காய் சினத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாஅ போல,
வைகல்தொறும் அசைவு இன்றி,
உல்கு செயக் குறை படாது                                     125

அருஞ்சொற்பொருள்:

116. மாஅ = மா = பெரிய

 

117. தூ = தூய்மை; எக்கர் = மணற்குன்று ; மடிந்து = தூங்கி

 

118. வால் =வெண்மை; இணர் = பூங்கொத்து

 

119. வேலாழி = கடல்; வியன் = அகன்ற

 

122. காய் சினத்த = சுடுகின்ற சினத்தோடு

 

123. மாஅ= மா = குதிரை

 

125. உல்கு = சுங்கவரி

 

பதவுரை:

116 - 117. மாஅ காவிரி மணம் கூட்டும் தூ எக்கர்த் துயில் மடிந்து = பெரிய காவிரியாறு கொண்டுவந்து குவித்த பூமணத்தோடு கூடிய தூய மணற்குவியலில் உறங்கி

 
118-119. வால் இணர் மடல் தாழை வேல் ஆழி வியன் தெருவில் = வெண்மையான பூங்கொத்தையும் மடலையும் உடைய தாழையையுடைய கடற்கரையில் உள்ள அகன்ற தெருவில்


120-121. நல் இறைவன் பொருள் காக்கும் தொல் இசைத் தொழில் மாக்கள் = நல்ல அரசனுடைய பொருளைப் பிறர் கொள்ளாமல் பாதுகாக்கும் தொன்மையான புகழையுடைய சுங்கவரி வசூலிப்பவர்கள்


122-123. காய் சினத்த கதிர்ச் செல்வன் தேர் பூண்ட மாஅ போல = சுடுகின்ற சினத்தையுடைய கதிரவனின் தேரில் பூட்டிய குதிரைகளைப் போல்


124-125. வைகல்தொறும் அசைவு இன்றி உல்கு செயக் குறை படாது = நாள்தோறும் சோம்பலில்லாமல் குறைவின்றி சுங்கம் வசூலிப்பர்.

கருத்துரை:

பெரிய காவிரியாறு கொண்டுவந்து குவித்த பூமணத்தோடு கூடிய தூய மணற்குவியலில் உறங்கி, வெண்மையான பூங்கொத்தையும் மடலையும் உடைய தாழையையுடைய  கடற்கரையில் உள்ள அகன்ற தெருவில், நல்ல அரசனுடைய பொருளைப் பிறர் கொள்ளாமல் பாதுகாக்கும் தொன்மையான புகழையுடைய சுங்கவரி வசூலிப்பவர்கள் சுடுகின்ற சினத்தையுடைய  கதிரவனின்  தேரில் பூட்டிய குதிரைகளைப் போல் நாள்தோறும் சோம்பலில்லாமல் குறைவின்றிச் சுங்கம் வசூலிப்பர்.

 

காவிரிப்பூம்பட்டினத்துப் பண்டசாலை

 

வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்,
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்று நிலத்து ஏற்றவும்,
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்,                              130

அளந்து அறியாப் பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி,
அருங் கடிப் பெருங் காப்பின்,
வலியுடை வல் அணங்கினோன்
புலி பொறித்து, புறம் போக்கி,                               135

மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடைப் போர் எறி,
மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்
வரை ஆடு வருடைத் தோற்றம் போல,
கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை             140

ஏழகத் தகரோடு உகளும் முன்றில்

 

அருஞ்சொற்பொருள்:

126. முகத்தல் = மொள்ளல்

 

132. ஈண்டுதல் = குவிதல்

 

134. கடி = காவல்; நோன்மை = பெருமை

 

138. சிமையம் = உச்சி, மலை; மால் = பெருமை; வரை = மலை;  கவாஅன் = பக்கமலை

 

139. வரை = மலை; வருடை = வருடைமான்  (ஒருவகை மான்)

 

140. ஞமலி = நாய்

 

141. ஏழகம் = ஆடு; உகளும் = குதிக்கும்

 

பதவுரை:

126-128 வான் முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல = மேகம் தான் கடலிலிருந்து  முகந்த நீரை மலையில் பொழிந்து, மலையில் பெய்த நீர் ஆற்றின் வழியாக. கடலில் பரவும் மழை பெய்யும் பருவம் போல


129-130. நீரினின்று நிலத்து ஏற்றவும் நிலத்தினின்று நீர்ப் பரப்பவும் = நீர் வழியாக வந்த பொருட்களை நிலத்தில் இறக்குமதி செய்யவும், நிலத்தில் விளைந்த  பொருட்களை கடல் வழியாக ஏற்றுமதி செய்வதற்காக மரக்கலங்களில் பரப்பவும்


131-132. அளந்து அறியாப் பல பண்டம் வரம்பு அறியாமை வந்து ஈண்டி = அளந்து அறிய முடியாத அளவுக்கு பலபொருட்கள் எல்லையின்றி வந்து குவிந்து கிடக்க, அவற்றை


133-134. அருங் கடிப் பெருங் காப்பின் வலியுடை வல் அணங்கினோன் = கடுமையான காவலுடைய சுங்கச் சாவடியில் வரி கொடுக்காமல் இருப்பவர்களுக்கு அச்சத்தைத் தரும் பெருமைக்குரிய,


135. புலி பொறித்து, புறம் போக்கி = சோழ மன்னனின் அடையாளமான புலிச் சின்னத்தைப் பொறித்து, புறத்தே வைத்த

 

136-137. மதி நிறைந்த மலி பண்டம் பொதி மூடைப் போர் எறி = மதிப்பிடப்பட்ட பல்வேறு பண்டங்களைப் பொதிந்து அடுக்கிய மூட்டைக் குவியலின் மேல் ஏறி


138-139. மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன் வரை ஆடு வருடைத் தோற்றம் போல = மேகங்கள் உலவும் உச்சியையுடைய பெரிய மலையின் பக்க மலைகளில் 

விளையாடும்  வருடைமானின் தோற்றம் போல

 

140-141. கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை ஏழகத் தகரோடு உகளும் முன்றில் = கூர்மையான நகங்களையும் வளைந்த கால்களையும் உடைய ஆண்நாய்களும் ஆட்டுக்கிடாய்களும் துள்ளிக் குதிக்கும் பண்டசாலையின் முற்றத்தில்

 

கருத்துரை:

தான் கடலிலிருந்து  முகந்த நீரை மேகம் மலையில் பொழிந்து, மலையில் பெய்த நீர் ஆற்றின் வழியாகக் கடலில் பரவும் மழை பெய்வதைப்போல, நீர் வழியாக வந்த பொருட்களை நிலத்தில் இறக்குமதி செய்யவும்,  நிலத்தில் விளைந்த  பொருட்களை கடல் வழியாக ஏற்றுமதி செய்வதற்காக மரக்கலங்களில் பரப்பவும், அளந்து அறிய முடியாத அளவுக்குப் பலபொருட்கள் எல்லையின்றி வந்து குவிந்து கிடக்கும். அவற்றைக் கடுமையான காவலுடைய சுங்கச் சாவடியில், வரி கொடுக்காமல் இருப்பவர்களுக்கு அச்சத்தைத் தரும் பெருமைக்குரிய சோழ மன்னனின் அடையாளமான புலிச் சின்னத்தைப் பொறித்து, புறத்தே உள்ள முற்றத்தில் வைக்கப்பட்டிருக்கும், மதிப்பிடப்பட்ட பல்வேறு பண்டங்களைப் பொதிந்து அடுக்கிய மூட்டைக் குவியலின் மேல் ஏறி கூர்மையான நகங்களையும் வளைந்த கால்களையும் உடைய ஆண்நாய்களும் ஆட்டுக்கிடாய்களும் ஏறிக் குதித்து விளையாடுவது, மேகங்கள் உலாவும் உச்சியையுடைய பெரிய மலையின் பக்க மலைகளில்  வருடைமான்கள் விளையாடுவது போல் காட்சி அளிக்கும்.

 

மாளிகையின் அமைப்பும் கடைத்தெருவும்


குறுந் தொடை நெடும் படிக்கால்
கொடுந் திண்ணை, பல் தகைப்பின்,
புழை, வாயில், போகு இடைகழி,
மழை தோயும் உயர் மாடத்து                                145

சேவடி, செறி குறங்கின்,
பாசிழை, பகட்டு அல்குல்,
தூசு உடை, துகிர் மேனி,
மயில் இயல், மான் நோக்கின்,
கிளி மழலை, மென் சாயலோர்                             150

வளி நுழையும் வாய் பொருந்தி,
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும்
காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன,
செறி தொடி முன்கை கூப்பி, செவ்வேள்
வெறி ஆடு மகளிரொடு செறியத் தாஅய்,            155

குழல் அகவ, யாழ் முரல,
முழவு அதிர, முரசு இயம்ப,
விழவு அறா வியல் ஆவணத்து

 

அருஞ்சொற்பொருள்:

142. தொடை =தொடர்ச்சி; குறுந்தொடை = ஒன்றற்கொன்று நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட (கட்டப்பட்ட); படிக்கால் = படிக்கட்டு

 

143. கொடுந்திண்ணை = சுற்றுத் திண்ணை; தகைத்தல் = தடுத்தல்; தகைப்பு = தடுத்துக் கட்டப்பட்ட அறைகள்

 

144. புழை = சிறிய வாயில்; வாயில் = பெரிய வாயில்; போகு இடைகழி = வாயில் வழியாக மாளிகைக்குச் செல்லும் நீண்ட உட்பகுதி

 

146. குறங்கு = தொடை

 

147. பாசிழை = சிறந்த அணிகலன்கள்; பகட்டு = பொலிவு; அல்குல் = அடிவயிறு

 

148. தூசு = நுண்ணிய உடை; துகிர் = பவளம்

 

152. மருங்கு = பக்கம்

 

153. அம்  = அழகிய; துடுப்பு = இதழ்

 

154. செறிதொடி = நெருக்கமாக அணியப்பட்ட வளையல்கள்;  செவ்வேள் = முருகன்

 

155. தாஅய் = பரந்து

 

156. அகவுதல் =ஒலித்தல்; முரலுதல் = ஒலித்தல்

                                                                             

158. அறா =நீங்காத; ஆவணம் = கடைத்தெரு

 

பதவுரை:

142-143. குறுந் தொடை நெடும் படிக்கால் கொடுந் திண்ணை = நெருக்காமாகக் கட்டப்பட்ட பல படிகளையுடைய நீண்ட படிக்கட்டுகளோடு கூடிய திண்ணையும்

 

143. பல் தகைப்பின் = பல அறைகளைக்கொண்ட


144. புழை, வாயில், போகு இடைகழி = சிறிய வாயிலும் பெரிய வாயிலும், வாயில் வழியாக மாளிகைக்கு உள்ளே செல்லும் நீண்ட உட்பகுதியும்


145. மழை தோயும் உயர் மாடத்து = மேகம் தவழும் அளவுக்கு உயர்ந்த மாளிகையும்


146. சேவடி, செறி குறங்கின் = சிவந்த அடிகளையும் நெருங்கிய தொடைகளையும்


147. பாசிழை, பகட்டு அல்குல் = சிறந்த அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு பொலிவுடன் விளங்கும் அடிவயிறும்


148. தூசு உடை, துகிர் மேனி = நுண்ணிய உடையும் பவளம் போன்ற மேனியும்


149. மயில் இயல், மான் நோக்கின் மயில் போன்ற சாயலும், மான் போன்ற பார்வையயும்


150. கிளி மழலை, மென் சாயலோர் =கிளி போன்ற மழலையும் மென்மையான சாயலும்


151. வளி நுழையும் வாய் பொருந்தி = காற்று நுழையும் இடத்தில்  பொருந்தி


152-154. ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும் காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன செறி தொடி முன்கை கூப்பி = உயர்ந்த மலையில் நுண்ணிய மகரந்தத்தை உதிர்க்கும் செங்காந்தள் மலரின் துடுப்பு போன்ற அழகிய மடல்கள் கவிழ்ந்து இருப்பதைப் போன்ற நெருக்கமாக வளையல்கள அணிந்த முன்கைகளைக் கூப்பி

 

154-155. செவ்வேள்வெறி ஆடு மகளிரொடு செறிய தாஅய்க் = முருகனுக்கு வெறியாட்டு நடைபெறும் பொழுது மகளிர் பாடும் இசையோடு பொருந்தி


155-158. குழல் அகவ, யாழ் முரல முழவு அதிர, முரசு இயம்ப விழவு அறா வியல் ஆவணத்து = புல்லாங்குழல் இசைக்க, யாழ் ஒலிக்க, மத்தளம் அதிர, முரசு முழங்க விழாக்கள் நடைபெறும் அகன்ற கடைத்தெருவில்

 

கருத்துரை:

நெருக்கமாகக் கட்டப்பட்ட பல படிகளையுடைய நீண்ட படிக்கட்டுகளோடு கூடிய திண்ணையும், பல அறைகளையும்,  சிறிய வாயிலும் பெரிய வாயிலும், வாயில் வழியாக மாளிகைக்கு உள்ளே செல்லும் நீண்ட உட்பகுதியையும் உடையதாக  மேகம் தவழும் அளவுக்கு உயர்ந்த மாளிகை இருந்தது. அங்கு, சிவந்த அடிகளையும், நெருங்கிய தொடைகளையும், சிறந்த அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு, பொலிவுடன் விளங்கும் அடிவயிறும், நுண்ணிய உடையும், பவளம் போன்ற மேனியும், கிளி போன்ற மழலையும், மென்மையான சாயலும் உடைய பெண்கள் காற்று நுழையும் சாளரங்களின்  அருகில் இருந்தனர்.  அப்பெண்கள், உயர்ந்த மலையில் நுண்ணிய மகரந்தத்தை உதிர்க்கும் செங்காந்தள் மலரின் அழகிய இதழ்கள் கவிழ்ந்து இருப்பதைப் போன்ற நெருக்கமாக வளையல்கள அணிந்த தங்கள் முன்கைகளைக் கூப்பி முருகனுக்கு வெறியாட்டு நடைபெறுவதைக் கண்டனர். மகளிர் பாடும் இசையோடு பொருந்தி புல்லாங்குழல் இசைக்க, யாழ் ஒலிக்க, மத்தளம் அதிர, முரசு முழங்க இடைவிடாமல் விழாக்கள் நடைபெறும் அகன்ற கடைத்தெரு உடையது காவிரிப்பூம்பட்டினம்.



பல்வேறு கொடிகள்

 

தெய்வக்கொடி


மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்; 160

அருஞ்சொற்பொருள்:

159. மை = குற்றம்; மை அறு = குற்றமற்ற

 

160. அணி = அழகு

 

பதவுரை:

159-160. மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் = குற்றமற்ற சிறப்புடைய தெய்வம் இருக்கின்ற கோயில் வாயிலில் பலர் தொழும் கொடியும்,

 

கருத்துரை:

குற்றமற்ற சிறப்புடைய தெய்வம் இருக்கின்ற, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட  கோயில் வாயிலில் பலர் தொழும் கொடியும்,

 

வீரர்களை வணங்கும் இடத்தில் உள்ள கொடிகள்

 

வரு புனல் தந்த வெண் மணல் கான் யாற்று
உரு கெழு கரும்பின் ஒண் பூப் போல,
கூழுடைக் கொழு மஞ்சிகை,
தாழுடைத் தண் பணியத்து,
வால் அரிசிப் பலி சிதறி,                             165

பாகு உகுத்த, பசு மெழுக்கின்,
காழ் ஊன்றிய கவி கிடுகின்
மேல் ஊன்றிய துகில் கொடியும்;

 

அருஞ்சொற்பொருள்:

161. வரு புனல் = ஆற்றுநீர்; கான்யாற்று = காட்டாற்று

 

162. உரு = அழகு; ஒண்மை = ஒளி

 

163. கூழ் = சோறு; மஞ்சிகை = கூடை

 

164 தாழ் உடை = கீழே விரித்த உடை; தண்மை = மென்மை; பண்னியம் = தின்பண்டம்

 

165. வால் = வெண்மை; சிதறி = பரப்பி

 

167. காழ் = வேலின் காம்பு; கிடுகு = கேடயம்; கவி கிடுகு = கவிழ்த்து வைக்கப்பட்ட கேடயத்தில்

 

168. துகில் = துணி

 

பதவுரை:

161 – 162. வரு புனல் தந்த வெண் மணல் கான் யாற்று உரு கெழு கரும்பின் ஒண் பூப் போல = ஆற்று நீர் கொண்டு வந்த வெண்மையான மணலையுடைய  கரையில் அழகான கரும்பின்  ஒளிபொருந்திய பூவைப் போல்


163. கூழுடைக் கொழு மஞ்சிகை = சமைத்த உணவுள்ள கூடை மேலும்


164- 165. தாழுடைத் தண் பணியத்து வால் அரிசிப் பலி சிதறி = கீழே விரித்த துணியில் உள்ள மென்மையான  தின்பண்டங்களின் மேலும் வெள்ளை அரிசியைப் பலியாகச் சிதறி

 

166-167. பாகு உகுத்த, பசு மெழுக்கின் காழ் ஊன்றிய கவி கிடுகின் = சாணியைக் கொட்டி மெழுகிய இடத்தில் வேலின் காம்பை நட்டு அதன் மேல் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த கேடயங்களின்

 

 168.மேல் ஊன்றிய துகில் கொடியும்= மேல் ஊன்றிய கொடியும்

கருத்துரை:

ஆற்று நீர் கொண்டுவந்த வெண்மையான மணலையுடைய  கரையில், அழகான கரும்பின்  ஒளிபொருந்திய பூவைப் போல் சமைத்த உணவுள்ள கூடை மேலும், கீழே விரித்த துணியில் வைக்கப்பட்டிருந்த மென்மையான தின்பண்டங்கள் மேலும், வெள்ளை அரிசியைப் பலியாகத் தூவி மக்கள் வழிபடுவர். அங்கு, சாணியைக் கொட்டி மெழுகிய இடத்தில், வேலின் காம்பை நட்டு அதன் மேல்  கவிழ்த்து வைக்கப்படிருந்த கேடயங்களின் மேல்  ஊன்றிய கொடிகளும்,

 

பல்துறைச் சான்றோர்கள் வாதிடும் இடத்திலுள்ள கொடி

 

பல் கேள்வித் துறை போகிய
தொல் ஆணை நல் ஆசிரியர் 170

உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும்;

 

அருஞ்சொற்பொருள்:

170. ஆணை = ஆன்றோர் மரபு

 

171. உறழ்தல்= வாதம் புரிதல்; உரு கெழு =அச்சம் பொருந்திய

 

பதவுரை:

169-170. பல் கேள்வித் துறை போகிய தொல் ஆணை நல் ஆசிரியர் = பல்வேறு கேள்வி அறிவோடு பழைய ஆன்றோர்களின் மரபில் வந்த நல்ல ஆசிரியர்கள்

 

171. உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் = வாதம் புரிவதற்காக உயர்த்திய அச்சம் பொருந்திய கொடியும்

 

கருத்துரை:

பல்துறைகளிலும் கேள்வியறிவோடு, பலநூல்களையும் நன்கு கற்றறிந்த பழைமையான மரபில் தோன்றிய நல்ல ஆசிரியர்கள் வாதம் புரிவதற்காக உயர்த்தப்பட்ட மேன்மை பொருந்திய கொடிகளும்,

 

கப்பல்களின்மேல் ஏற்றப்பட்டிருக்கும் கொடிகள்


வெளில் இளக்கும் களிறு போல,
தீம் புகார்த் திரை முன்துறை,
தூங்கு நாவாய், துவன்று இருக்கை,
மிசைக் கூம்பின் நசைக் கொடியும்;                     175


அருஞ்சொற்பொருள்:

172.வெளில் = யானைக் கட்டுத்தறி; இளக்கும் = அசைக்கும்

 

174. நாவாய் = கப்பல்; துவன்று = நிறைந்த; இருக்கை = இருப்பிடம்

 

175. மிசை = மேல்; கூம்பு = கப்பல்களின் உச்சி; நசை = விருப்பம்

 

பதவுரை:

172. வெளில் இளக்கும் களிறு போல = கட்டுத்தறிகளை அசைக்கும் யானைகளைப் போல்


173. தீம்
புகார்த் திரை முன்துறை = இனிய காவிரிப்பூம்பட்டினத்தின் அலைகளையுடைய கடற்கரையின் முன்னே

 

174. தூங்கு நாவாய், துவன்று இருக்கை = அசைகின்ற இயல்பையுடைய கப்பல்கள் நிறைந்த இடத்தில்


175. மிசைக் கூம்பின் நசைக் கொடியும் = கப்பல்களின் உச்சியில் ஏற்றப்பட்டுள்ள, வணிகர்கள் விரும்பும் கொடிகளும்

 

கருத்துரை:

இனிய காவிரிப்பூம்பட்டினத்தின் அலைகளையுடைய கடற்கரையின்முன் கட்டுத்தறிகளை அசைக்கும் யானைகளைப் போல் அசைகின்ற இயல்பையுடைய கப்பல்கள் நிறைந்த இடத்தில், கப்பல்களின் உச்சியில் ஏற்றப்பட்டுள்ள, வணிகர்கள் விரும்பும் கொடிகளும்

 

கள் விற்கும் இடத்தில் இருந்த கொடிகள்



மீன் தடிந்து, விடக்கு அறுத்து,
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்,
மணல் குவைஇ, மலர் சிதறி,
பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு நொடைக் கொடியோடு; 180

 

அருஞ்சொற்பொருள்:

176. தடிந்து = வெட்டி; விடக்கு = இறைச்சி

179. புதவு = கதவு

 

180. நறவு = கள்; நொடை = விலை; விற்றல்

 

பதவுரை:

176-177. மீன் தடிந்து, விடக்கு அறுத்து, ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் = மீனை வெட்டி, இறைச்சியை அறுத்து, தசைகளைப் பொரிக்கும் ஆரவாரமுடைய  முற்றத்தை உடைய

 


178.- 179. மணல் குவைஇ, மலர் சிதறி, பலர் புகு மனைப் பலிப் புதவின் = மணலைக் குவித்து, மலர்களைத் தூவி, பலரும் புகும் கள் விற்கும் வீடுகளில் தெய்வத்திற்குப் பலிகொடுக்கும் கதவுகளில்

 

180. நறவு நொடைக் கொடியோடு = கள் விற்றலைக் குறித்துக் கட்டிய கொடிகளும்

 

கருத்துரை:

மீனை வெட்டி, இறைச்சியை அறுத்து, தசைகளைப் பொரிக்கும் ஆரவாரமுடைய முற்றத்தில் மணலைக் குவித்து, மலர்களைத் தூவி, பலரும் புகும் கள் விற்கும் வீடுகளில், தெய்வத்திற்குப் பலிகொடுக்கும் கதவுகளில் கள் விற்றலைக் குறித்துக் கட்டிய கொடிகளும்,

 

பலகொடிகள் விளங்கும் பட்டினம்

 

பிற பிறவும் நனி விரைஇ,
பல் வேறு உருவின் பதாகை நீழல்
செல் கதிர் நுழையாச் செழு நகர் . . . . .

 

அருஞ்சொற்பொருள்:

181.பிற பிறவும் = வேறு பல கொடிகளும்;  நனி =மிகுதி; விரைஇ = கலந்து;

 

182. உரு =வடிவம்; பதாகை =கொடி; நீழல் = நிழல்

 

பதவுரை:

181. பிற பிறவும் நனி விரைஇ = மற்றும் பல்வேறு பண்டங்களை விற்றலைக் குறித்து ஏற்றப்பட்ட பல கொடிகளும் மிகவும் கலந்து

 

182. பல் வேறு உருவின் பதாகை நீழல் = பல வண்ணங்களும் வடிவங்களும் உடைய கொடிகளின் நிழலில்


183. செல் கதிர் நுழையாச் செழு நகர் = எங்கும் நுழைகின்ற கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாத செழுமையான நகரம் காவிரிப்பூம்பட்டினம்.

 

கருத்துரை:

மற்றும் பல்வேறு பண்டங்களை விற்றலைக் குறித்து ஏற்றப்பட்ட பலகொடிகளும் மிகவும் கலந்து, பல வண்ணங்களும் வடிவங்களும் உடைய கொடிகளின் நிழல் இருப்பதால், எங்கும் நுழைகின்ற கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாத அளவுக்குச் செழுமையான நகரம் காவிரிப்பூம்பட்டினம்.

 

காவிரிப்பூம்பட்டினத்தின் வளம் பல நிறைந்த தெருக்கள்



 . . . . . . . . . . . . . . . .                 வரைப்பின்

செல்லா நல் இசை அமரர் காப்பின்,
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்,                          185

காலின் வந்த கருங் கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும்,                     190

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி,
வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின்

 

அருஞ்சொற்பொருள்:

183. வரைப்பு = எல்லை

 

184. செல்லா = கெடாத; இசை = புகழ்; அமரர் = தேவர்

 

185. பரிதல் =ஓடுதல்; புரவி = குதிரை

 

186. கால் = உருளை (வண்டி); கறி = மிளகு; மூடை = மூட்டை

 

187. மணி = மாணிக்கம்

 

188. குடமலை = மேற்குமலை ; ஆரம் =சந்தனம்; அகில் = மணமுள்ள ஒருமரம்

 

189. துகிர் = பவளம்

 

190. வாரி = விளைவு

 

191. காழகம் = மியன்மார் (பர்மா); ஆக்கம் = பொருள்

 

192. நெரிய = குவிய; ஈண்டி = திரண்டு

 

193. தலைமயங்குதல் = கலத்தல் ; நனந்தலை = அகன்ற இடம்; மறுகு = தெரு

 

பதவுரை:

183. வரைப்பின் = எல்லையில்

 

184. செல்லா நல் இசை அமரர் காப்பின் = கெடாத நல்ல புகழையுடைய தேவர்கள் பாதுகாப்பதால்


185. நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும் = கடல் வழியாக வந்த நிமிர்ந்து ஓடும் குதிரைகளும்,


186. காலின் வந்த கருங் கறி மூடையும் = வண்டிகளின் வழியாக வந்த கரிய நிறமுள்ள மிளகு மூட்டைகளும்


187. வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்= வடக்கே உள்ள மலைகளிலில் விளைந்த மாணிக்கமும் பொன்னும்


188. குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் = மேற்கே உள்ள மலைகளில் விளைந்த சந்தனமும், அகிலும்


189. தென் கடல் முத்தும், குண கடல் துகிரும் = தென்கடலில் பிறந்த முத்தும், கிழக்குக் கடலில் கிடைத்த பவளமும்


190. கங்கை வாரியும், காவிரிப் பயனும் = கங்கை ஆற்றின் நீர்வளத்தால் விளைந்த பலபொருட்களும், காவிரி ஆற்றின் நீர்வளத்தால் உண்டாகிய பொருட்களும்


191. ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் = ஈழத்தில் இருந்து வந்த உணவுப்பொருட்களும், மியான்மாரில் (பர்மாவில்) உண்டான பொருட்களும்


192. அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி = மற்ற அரிய பொருட்களும், பெரிய பொருட்களும், நிலம் நெளியுமாறு திரண்டு


193. வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின்= பலவகை வளங்களும் கலந்து கிடக்கின்ற அகன்ற தெருக்களை உடையது காவிரிப்பூம்பட்டினம்.


கருத்துரை:

நல்ல புகழையுடைய தேவர்கள் காவிரிப்பூம்படினத்தின் எல்லையைப் பாதுகாப்பதால், கடல் வழியாக வந்த நிமிர்ந்து ஓடும் குதிரைகளும், வண்டிகளின் வழியாக வந்த கரிய நிறமுள்ள மிளகு மூட்டைகளும், வடக்கே உள்ள மலைகளில் விளைந்த மாணிக்கமும் பொன்னும்,  மேற்கே உள்ள மலைகளில் விளைந்த சந்தனமும் அகிலும், தென்கடலில் பிறந்த முத்தும், கிழக்குக் கடலில் கிடைத்த பவளமும், கங்கை ஆற்றின் நீர்வளத்தால் விளைந்த பலபொருட்களும், காவிரி ஆற்றின் நீர்வளத்தால் உண்டாகிய பொருட்களும், ஈழத்தில் இருந்து வந்த உணவுப்பொருட்களும், மியான்மாரில் (பர்மாவில்) உண்டான பொருட்களும், மற்ற அரிய பொருட்களும், பெரிய பொருட்களும், நிலம் நெளியுமாறு திரண்டு பலவகை வளங்களும் கலந்து கிடக்கின்ற அகன்ற தெருக்களை உடையது காவிரிப்பூம்பட்டினம்.

 

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழும் மக்களின் மாட்சிமை

 

உழவர்களின் நற்பண்புகள்


நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சி,                                            195

கிளை கலித்துப் பகை பேணாது,
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்,
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்,
கொலை கடிந்தும், களவு நீக்கியும்,
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,               200

நல் ஆனொடு பகடு ஓம்பியும்,
நான் மறையோர் புகழ் பரப்பியும்,
பண்ணியம் அட்டியும், பசும் பதம் கொடுத்தும்,
புண்ணியம் முட்டாத் தண் நிழல் வாழ்க்கை,
கொடு மேழி நசை உழவர்                                      205

அருஞ்சொற்பொருள்:

194. நாப்பண் = நடு இடம்

 

195. ஏமாப்பு =மகிழ்ச்சி; துஞ்சி = தூங்கி

 

196. கலித்து =தழைத்தல், பெருகுதல் ; பேணாது = விரும்பாமல்

 

197. வலைஞர் = பரதவர் (மீனவர்); பிறழ்தல் = துள்ளுதல்

 

198. விலைஞர் = விற்பவர்; குரம்பை = குடிசை; ஈண்டுதல் = திரளுதல்

 

199. கடிந்து = அழித்து

 

200. ஆவுதி = வேள்வி; அருத்தி = செய்து; மா = விலங்கு;

 

201. ஆன் =பசு; பகடு = எருது; ஓம்பி = பாதுகாத்து

 

203. பண்ணியம் = பண்டம் (உணவுப் பொருட்கள்); அட்டி = சமைத்து ; பசும்பதம் = புது அரிசிச் சோறு

 

204. முட்டா = குறையாமல்

 

205.கொடு = வளைவு; மேழி = கலப்பை; நசை = விருப்பம்

 

பதவுரை:

194-195. நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் ஏமாப்ப இனிது துஞ்சி = மீன்களும் விலங்குகளும் நீரிலும் நிலத்திலும் இனிதே உறங்கி

196. கிளை கலித்துப் பகை பேணாது = தம்மினங்களைப் பெருக்கி, இவர் தம்மைக் கொல்லும் பகைவர்  பகைவர் என்று எண்ணாமல்


197. வலைஞர் முன்றில் மீன் பிறழவும் = மீன்கள் மீன் பிடிப்போர்களின் முற்றத்தில் துள்ளி விளையாடவும்,


198. விலைஞர் குரம்பை மா ஈண்டவும் = இறைச்சியை விலை கூறி விற்பவர்களின் குடிசைகள் இருக்கும் இடத்தில் விலங்குகள் திரண்டு நிற்கவும்


199. கொலை கடிந்தும், களவு நீக்கியும் = கொலைத்தொழிலைச் செய்பவர்கள் தங்கள் கொலைக் குணத்தை அழித்தும், களவுத்தொழில் புரிபவகள் களவு புரிவதை நீக்கியும்


200. அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும் = தேவர்களைப் போற்றியும் வேள்விகளைச்  விரும்பிச் செய்தும்


201. நல் ஆனொடு பகடு ஓம்பியும் = நல்ல பசுக்களோடு எருதுகளைப் பாதுகாத்தும்


202. நான் மறையோர் புகழ் பரப்பியும் = ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை ஓதும் அந்தணர்களின் புகழைப் பரப்பியும்


203. பண்ணியம் அட்டியும், பசும் பதம் கொடுத்தும் = விருந்தினர்களுக்குப்  பண்டங்களைச் சமைத்துக் கொடுத்தும், அரிசியைப் பிறர்க்குக் கொடுத்தும்.

 

204. புண்ணியம் முட்டாத் தண் நிழல் வாழ்க்கை = அறச்செயல்களை குறைவில்லாமல் செய்து, அமைதியான வாழ்க்கையோடு


205. கொடு மேழி நசை உழவர் = வளைந்த கலப்பையைக்கொண்டு தொழில்  செய்வதை விரும்பும் உழவர்


 கருத்துரை:

காவிரிப்பூம்பட்டினத்தில் மீன்களும் விலங்குகளும் நீரிலும் நிலத்திலும் இனிதே உறங்கி, ஒன்றாக இருந்து, தங்களுடைய இனத்தைப் பெருக்கி வாழ்கின்றனர். அங்கே, மீன் பிடிப்பவர்கள் தம்மைக் கொல்லும் பகைவர்கள் என்று எண்ணாமல் அவர்களின்  அவர்களின் முற்றத்தில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன.  இறைச்சியை விலை கூறி விற்பவர்கள் தங்கள் பகைவர்கள் என்று எண்ணாமல், அவர்கள் வாழும் குடிசைகள் இருக்கும் இடத்தில் விலங்குகள் திரண்டு நிற்கின்றன. மீன் பிடிப்பவர்களும் இறைச்சி விற்பவர்களும் தாங்கள் கொலை செய்வதைத் தவிர்த்தனர்.  திருடுபவர்கள் திருடுவதைத் தவிர்த்தனர். உழவர்கள் தேவர்களைப் போற்றி, வேள்விகளை விரும்பிச் செய்தனர்; நல்ல பசுக்களையும் எருதுகளையும்  பாதுகாத்தனர்;  ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை ஓதும் அந்தணர்களின் புகழைப் பரப்பினர்; விருந்தினர்களுக்குப்  பண்டங்களைச் சமைத்துக் கொடுத்தும், அரிசியைப் பிறர்க்குக் கொடுத்தும் அறச்செயல்களை குறைவில்லாமல் செய்தனர். இவ்வாறு, வளைந்த கலப்பையைக்கொண்டு தொழில் செய்வதை விரும்பும் உழவர் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.



வணிகர் குடிச் சிறப்பு

 

நெடு நுகத்துப் பகல் போல,
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்,
வடு அஞ்சி, வாய் மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்ப நாடி,
கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது, 210

பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி, துவன்று இருக்கை

 

அருஞ்சொற்பொருள்:

206. நுகம் =நுகத்தடி; பகல் = நுகத்தாணி

 

208. வடு =பழிச்சொல்; வாய் மொழிதல் = உண்மையைக் கூறுதல்

 

212. கொண்டி = பொருள்; துவன்று = நிறைந்து

 

பதவுரை:

206-207.  நெடு நுகத்துப் பகல் போல நடுவு நின்ற நல் நெஞ்சினோர் = நெடிய நுகத்தடியின் நடுவில் வைக்கப்பட்டுள்ள நுகத்தாணி போல் நடுவுநிலைமை தவறாத நல்ல நெஞ்சினையுடைய வணிகர்


208. வடு அஞ்சி, வாய் மொழிந்து = பழிக்கு அஞ்சி வாய்மை பேசி


209. தமவும் பிறவும் ஒப்ப நாடி = தம்முடைய  பொருட்களையும் பிறருடைய பொருட்களையும் சமமாக மதித்து


210. கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது = பிறரிடம் இருந்து பொருட்களை அதிகமாக வாங்காமலும், தாம் பிறருக்குக் கொடுக்கும்பொழுது குறைவாகக் கொடுக்காமலும்

 

211.பல் பண்டம் பகர்ந்து வீசும் = பல பண்டங்களையும் நியாயமான விலை கூறி விற்கும்

 

212.தொல் கொண்டி, துவன்று இருக்கை = தொன்றுதொட்டு வணிகம் செய்யும் வணிகர்களின் இருப்பிடம்

 

கருத்துரை:

நெடிய நுகத்தடியின் நடுவில் வைக்கப்பட்டுள்ள நுகத்தாணி போல் நடுவுநிலைமை தவறாத நல்ல நெஞ்சினையுடைய வணிகர் பழிக்கு அஞ்சி வாய்மை பேசி, தம்முடைய  பொருட்களையும் பிறருடைய பொருட்களையும் சமமாக மதித்து, பிறரிடம் இருந்து பொருட்களை அதிகமாக வாங்காமலும், தாம் பிறருக்குக் கொடுக்கும்பொழுது குறைவாகக் கொடுக்காமலும், பல பண்டங்களையும் நியாயமான விலை கூறி விற்கும் தொன்றுதொட்டு வணிகம் செய்யும் வணிகர்களின் இருப்பிடமாகக் காவிரிப்பூம்பட்டினம் உள்ளது.

 



பன்னாட்டு மக்களும் வாழும் காவிரிப்பூம்பட்டினம்


பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு,                                     215

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும்,
முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்

 

அருஞ்சொற்பொருள்:

213. ஆயம் = கூட்டம்; பதி = நாடு

214. முது = பேரறிவு; வாய்தல் = பெறுதல்; ஒக்கல் = சுற்றம்

 

215. சாறு = விழா; அயர்தல் = கொண்டாடுதல்; தொக்காங்கு = கூடியது போல

 

218. முட்டா = குறைவில்லாத

 

பதவுரை:

213. பல் ஆயமொடு பதி பழகி = பல்வேறு மக்கட் கூட்டங்களோடும் பல்வேறு நாடுகளிலும் சென்று பழகி


214. வேறு வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல் = வெவ்வேறான உயர்ந்த அறிவு நிரம்பப்பெற்ற சுற்றத்தார்


215. சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு = திருவிழாக்கள் நடைபெறும் பழைமையான ஊருக்குச் சென்று கூடினாற்போல்


216. மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப் = மொழிகள் பலவற்றையும் அறிந்த பழி இல்லாத நாடுகளிருந்து


217. புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும் = தம் நாடுகளிலிருந்து பெயர்ந்து வந்த வணிகர்கள் இனிதாக வாழும்


218. முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும் = குறைவில்லாத சிறப்புடைய காவிரிப்பூம்பட்டினத்தைப் பெற்றாலும்

 

 

 

கருத்துரை:
பல்வேறு மக்கட் கூட்டங்களோடும், பல்வேறு நாடுகளிலும் சென்று பழகி, வெவ்வேறான உயர்ந்த அறிவு நிரம்பப்பெற்ற சுற்றத்தார், திருவிழாக்கள் நடைபெறும் பழைமையான ஊருக்குச் சென்று கூடினாற்போல், மொழிகள் பலவற்றையும் அறிந்த பழி இல்லாத  தம் நாடுகளிலிருந்து பெயர்ந்து வந்த வணிகர்கள் இனிதாக வாழும் குறைவில்லாத சிறப்புடைய காவிரிப்பூம்பட்டினத்தைப் பெற்றாலும்




தலைவியைவிட்டுப் பிரிய விரும்பாத தலைவன்


வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய,
வாரேன்; வாழிய, நெஞ்சே!

 

அருஞ்சொற்பொருள்:

219. வார் = நீளம்; இரு = கரிய ; வயங்குதல் = விளங்குதல்;  இழைதல் = செய்தல்; வயங்கு இழை = ஒளிபொருந்திய அணிகலன்களையுடையவள்; ஒழிய = பிரிந்திருக்க

 

பதவுரை:

219. வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய = நீண்ட கரிய கூந்தலையுடைய, ஒளிபொருந்திய அணிகலன்களையுடயவளை (அணிகலன்களையுடய என் தலைவியை) விட்டுப் பிரிந்து


220. வாரேன்; வாழிய, நெஞ்சே! = உன்னோடு வரமாட்டேன், நெஞ்சமே நீ வாழ்க!                                                                                                                                                                                                     

கருத்துரை:

நீண்ட கரிய கூந்தலையும், ஒளிபொருந்திய அணிகலன்களையுமுடைய என் தலைவியை விட்டுப் பிரிந்து உன்னோடு வரமாட்டேன். நெஞ்சமே நீ வாழ்க!



திருமாவளவன் சிறையிலிருந்து தப்பியதும் அரசுரிமை பெற்றதும்


. . . . . . . . . . . .                                கூர் உகிர்க்                            220

கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு,
பிறர் பிணியகத்து இருந்து, பீடு காழ் முற்றி;
அருங் கரை கவியக் குத்தி, குழி கொன்று,
பெருங் கை யானை பிடி புக்காங்கு,
நுண்ணிதின் உணர நாடி, நண்ணார்                               225

செறிவுடைத் திண் காப்பு ஏறி, வாள் கழித்து,
உரு கெழு தாயம் ஊழின் எய்தி

 

அருஞ்சொற்பொருள்:

220. கூர் = கூர்மை; 

 

221. கொடுவரி = வளைந்த வரிகள்; குருளை = புலிக்குட்டி;

 

222. பிணியகம் = காவலுள்ள இடம் (சிறை); பீடு = வலிமை; காழ் = மனவுறுதி

 

223. அருங்கரை = ஏறுதற்கு அரிய கரை; கவித்தல் = இடித்தல்

 

224. பெருங் கை யானை = பெரிய தும்பிக்கை உடைய  ஆண்யானை; பிடி =  பெண் யானை; புக்காங்கு =நோக்கிச் சென்றாற்போல்

 

225. நுண்ணிதின் உணர= தன்னுடைய நுண்ணறிவால் உணர்ந்து; நாடி = ஆராய்ந்து; நண்ணார் = பகைவர்

 

226. செறிவு = நெருக்கம்; திண் = வலி; காப்பு = காவல்

 

227. உரு = அச்சம்; கெழு = பொருந்திய; தாயம் = அரசுரிமை; ஊழ் = முறை

 

பதவுரை:

220. கூர் உகிர்= கூர்மையான நகங்கள்

 

221. கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு = வளைந்த வரிகளை உடைய புலிக்குட்டி கூட்டுக்குள் வளர்ந்தாற்போல்


222. பிறர் பிணியகத்து இருந்து, பீடு காழ் முற்றி = பகைவர்களது சிறையிலிருந்து, தனக்குரிய வலிமையும் மனவுறுதியும் அதிகரித்து


223. அருங் கரை கவியக் குத்தி, குழி கொன்று = ஏறுதற்கு அரிய கரையைக் குத்தி இடித்து


224. பெருங் கை யானை பிடி புக்காங்கு = பெரிய தும்பிக்கையை உடைய  ஆண்யானை தன் துணையாகிய பெண்யானையை நோக்கிச் சென்றதைப்போல்


225. நுண்ணிதின் உணர நாடி, நண்ணார்= தன் நுண்ணறிவால் அறிந்து, ஆராய்ந்து பகைவரின்

 

226. செறிவுடைத் திண் காப்பு ஏறி, வாள் கழித்து = நெருக்கமும் வலிமையும் உடைய  சிறையின் மதிலின்மீது ஏறி, வாளை உறையிலிருந்து எடுத்து


227. உரு கெழு தாயம் ஊழின் எய்தி = அச்சம் பொருந்திய தன் அரசுரிமையை முறைப்படி திருமாவளவன் பெற்றான்.

 

கருத்துரை:

கூர்மையான நகங்களும், வளைந்த வரிகளும் உடைய புலிக்குட்டி, கூட்டுக்குள் வளர்ந்தாற்போல் பகைவர்களது சிறையிலிருந்த திருமாவளவன், தனக்குரிய வலிமையும் மனவுறுதியும் அதிகரித்து, ஏறுதற்கு அரிய கரையைக் குத்தி இடித்து, பெரிய தும்பிக்கையை உடைய  ஆண்யானை தன் துணையாகிய பெண்யானையை நோக்கிச் சென்றதைப்போல், தன் நுண்ணறிவால் அறிந்து, ஆராய்ந்து,  பகைவரின் நெருக்கமும் வலிமையுமுடைய  சிறையின் மதிலின்மீது ஏறி, வாளை உறையிலிருந்து எடுத்துப் போரிட்டு,  அச்சம் பொருந்திய தன் அரசுரிமையை திருமாவளவன் முறைப்படி பெற்றான்.



திருமாவளவனின் போர்த்திறம்


பெற்றவை மகிழ்தல் செய்யான், செற்றோர்
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்,
முடியுடைக் கருந் தலை புரட்டும் முன் தாள்,                               230

உகிருடை அடிய, ஓங்கு எழில் யானை,
வடி மணிப் புரவியொடு, வயவர், வீழ,
பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப,
தூறு இவர் துறுகல் போல, போர் வேட்டு,
வேறு பல் பூளையொடு உழிஞை சூடிப்,                                       235

பேய்க் கண் அன்ன பிளிறுகடி முரசம்
மாக்கண் அகல் அறை அதிர்வன முழங்க,
முனை கெடச் சென்று, முன் சமம் முருக்கி,
தலை தவச் சென்று தண்பணை எடுப்பி,

அருஞ்சொற்பொருள்:

228. செற்றோர் = பகைவர்

 

229. கடி = காவல் ; கதவுகொல் = கதவுகளை முறிக்கும்; மருப்பு = கொம்பு

 

231. உகிர் = நகம்; ஓங்கு எழில் யானை= யானைக்குரிய இலக்கணம் முழுதும் அமைந்த யானை

 

232. வடிமணி = அழகிய மணி; புரவி = குதிரை ; வயவர் = வீரர்கள்

 

234. தூறு = சிறிய செடி; இவர்தல் = படர்தல்; துறுகல் = பாறை; தூறுஇவர் துறுகல் = சிறிய

செடிகள் படர்ந்த பாறை; வேட்டு = விரும்பி

 

235. பூளை = பூளைப்பூ; உழிஞை = உழிஞை மலர்;

 

236. பிளிறுதல் = முழங்குதல்; கடி = காவல்

 

237. மாக்கண் = பெரிய அடிக்கும் இடத்தைக்கொண்ட ; அகலறை = அகல்+அறை = அகன்ற பாசறை

 

238. முனை = போர்முனை; சமம் = போர்; முன்சமம் = முதல் போர்; முருக்கி = அழித்து

 

239. தவ = மிகுதி; தண்பணை = மருதநிலம்; எடுப்பி = போக்கி (விரட்டி)

 

பதவுரை:

228. பெற்றவை மகிழ்தல் செய்யான், செற்றோர் = தான் பெற்ற அரசுரிமையால் மகிழ்ச்சி அடையாதவனாய், பகைவர்களின்


229. கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின் = காவல் மிகுந்த அரண்களை அழித்து, கோட்டைகளின் கதவுகளை முறிக்கும் கொம்புகளையுடைய,


230. முடியுடைக் கருந் தலை புரட்டும் முன் தாள் = பகைவர்களின் முடியுடைய கரிய தலைகளை உதைத்து உருட்டும்  முன்காலில்


231. உகிருடை அடிய, ஓங்கு எழில் யானை = நகங்களுடைய பாதங்களைக்கொண்ட  அழகிய யானைகளோடும்


232. வடி மணிப் புரவியொடு, வயவர் வீழ = அழகிய மணிகளை அணிந்த குதிரைகளோடும் சென்று, பகைவீரர்கள் விழுமாறு


233. பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப =  பெரிய நல்ல வானத்தில் பருந்துகள் உலாவித் திரியும்


234. தூறு இவர் துறுகல் போல, போர் வேட்டு =  சிறிய செடிகள் படர்ந்த பாறைகள் போல, போரை விரும்பிச் செய்வதற்கு 


235. வேறு பல் பூளையொடு உழிஞை சூடி= வெவ்வேறு பூக்களோடு, பூளைப் பூவையும், உழிஞைப் பூவையும் சூடி

236. பேய்க் கண் அன்ன பிளிறுகடி முரசம் = பேயின் கண் போன்ற, முழங்குகின்ற பெரிய அடிக்கும் இடத்தைகொண்டமுழங்கும்  காவல் முரசம்


237. மாக்கண் அகல் அறை அதிர்வன முழங்க = பெரிய இடத்தையுடைய அகன்ற பாசறையில் அதிர்ந்து முழங்க


238. முனை கெடச் சென்று, முன் சமம் முருக்கி = பகைவரின் போர்முனை அழியுமாறு போர் நடத்திச் சென்று, முதற் போரிலே யே அவர்களை வென்று,


239. தலை தவச் சென்று தண்பணை எடுப்பி =அத்தோடு அமையாமல், அப் பகைவரின் அரணிற்கு மேலும் மிக்குச் சென்று, மருதநில மக்களை விரட்டி

 

கருத்துரை:

திருமாவளவன் தான் பெற்ற அரசுரிமையால் மகிழ்ச்சி அடையவில்லை. அவனுடைய யானைகள் பகைவர்களின் காவல் மிகுந்த அரண்களை அழித்து, கோட்டைகளின் கதவுகளை முறிக்கும் கொம்புகளையுடையவை. அவை பகைவர்களின் முடியுடைய கரிய தலைகளை உதைத்து உருட்டும் முன்காலில் நகங்களுடைய பாதங்களைக்கொண்டவை. அத்தகைய அழகிய யானைகளோடும், அழகிய மணிகளை அணிந்த குதிரைகளோடும் சென்று, பகைவீரர்கள் விழுமாறும், பெரிய நல்ல வானத்தில் பருந்துகள் உலாவித் திரியுமாறும் திருமாவளவன் போரை விரும்பிச் செய்தான்.  சிறிய செடிகள் படர்ந்த பாறைகள் போல், வெவ்வேறு பூக்களோடு, பூளைப் பூவையும், உழிஞைப் பூவையும் சூடிய, போரை விரும்பிய வீரர்களுடன், பேயின் கண் போன்ற பெரிய அடிக்கும் இடத்தைக்கொண்ட, முழங்கும் காவல் முரசம் அகன்ற பாசறையில் அதிர்ந்து முழங்க, பகைவரின் போர்முனை அழியுமாறு போர் நடத்திச் சென்று, முதற் போரிலேயே அவர்களை வென்று, அத்தோடு அமையாமல், அப் பகைவரின் அரணிற்கு மேலும் மிக்குச் சென்று, திருமாவளவன் மருதநில மக்களை விரட்டினான்.

சிறப்புக் குறிப்பு:

பூளை உழிஞை முதலிய பூக்களைச் சூடிய வீரர்களின் கூட்டத்திற்குச் சிறிய செடிகள் படர்ந்த பாறைகள் உவமை.

 

பூளை மலர்களை வெற்றிக்கு அடையாளமாகச் சூடுவதும், பகை மன்னர்களின் மதிலை முற்றுகையிடும்பொழுது உழிஞை மலர்களைச் சூடுவதும் சங்க காலத்தில் வழக்கிலிருந்ததாகக் கருதப்படுகிறது.

 

திருமாவளவன் நடத்திய போரால் மருதநிலம் வளம் அழிதல்



வெண் பூக் கரும்பொடு செந்நெல் நீடி,                                         240

மா இதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி,
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை,
கொழுங் கால் புதவமொடு செருந்தி நீடி,
செறுவும் வாவியும், மயங்கி, நீர் அற்று,
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும்;                245

அருஞ்சொற்பொருள்:

240. நீடி = நீண்டு

 

241. மயங்கி = கலந்து

 

242. கராஅம் = முதலை; கலித்தல் = செருக்குதல்; கண் = இடம்; அகன் = அகன்ற, பொய்கை =நீர்நிலை

 

243. கொழுங்கால் = வளமான அடிப்பகுதி; புதவம் = அறுகம்புல்; செருந்தி = கோரைப்புல்; நீடி = நீண்டு

 

244. செறு = வயல்; வாவி = குளம்

 

245. அறுகோட்டு = வரிகளையுடய கொம்பு; இரலை = ஆண்மான்; பிணை = பெண்மான்; உகளுதல் = ஓடித் திரிதல்

 

பதவுரை:

240. வெண் பூக் கரும்பொடு செந்நெல் நீடி = வெண்மையான பூக்களையுடைய கரும்போடு செந்நெல் நீண்டு

241. மா இதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி = பெரிய இதழ்களையுடைய குவளை மலர்களோடு நெய்தற் பூக்களும் கலந்து


242. கராஅம் கலித்த கண் அகன் பொய்கை = முதலைகள் செருக்குடன் இருந்த அகன்ற இடத்தையுடைய நீர்நிலைகளில்


243. கொழுங் கால் புதவமொடு செருந்தி நீடி = வளமான அடிப்பகுதியையுடைய அறுகம்புற்களோடு கோரைப்புற்களும் நீண்டு வளர்ந்து

 
244. செறுவும் வாவியும், மயங்கி, நீர் அற்று = வயலும் குளமும் வேற்றுமையின்றித் திரிந்து, நீர் இல்லாமல்


245. அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் = வரிகளுடன்கூடிய கொம்புகளையுடைய  ஆண்மான்களோடு பெண்மான்கள் ஓடித்திரிய

கருத்துரை:

திருமாவளவன் போர் நடத்துவதற்குமுன், வயல்களில் வெண்மையான பூக்களையுடைய கரும்போடு செந்நெல்லும் நீண்டு வளர்ந்திருந்தன. பெரிய இதழ்களையுடைய குவளை மலர்களோடு நெய்தற் பூக்களும் நீர்நிலைகளில் கலந்து வளர்ந்திருந்தன. அங்கு, முதலைகள் செருக்குடன் இருந்தன.  போருக்குப் பிறகு, அகன்ற இடத்தையுடைய நீர்நிலைகளில் வளமான அடிப்பகுதியையுடைய அறுகம்புற்களோடு கோரைப்புற்களும் நீண்டு வளர்ந்து வயல்களும் நீர்நிலைகளும் வேற்றுமையின்றித் திரிந்து, நீர் இல்லாமல் இருந்தன. அங்கே வரிகளுடன்கூடிய கொம்புகளையுடைய ஆண்மான்களோடு பெண்மான்கள் ஓடித்திரிந்தன.

 

பகைவர் நாட்டு வழிபாட்டிடங்களின் நிலை


கொண்டி மகளிர், உண்துறை மூழ்கி,
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்,
மலர் அணி மெழுக்கம், ஏறிப் பலர் தொழ,
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்,
பரு நிலை நெடுந் தூண் ஒல்கத் தீண்டி,                                       250

பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்;


அருஞ்சொற்பொருள்:

246. கொண்டி = கொள்ளை (பகைவர் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட  பெண்டிர்);                                                                                                     உண்துறை = நீர் உண்ணும் துறை

 

247. அந்தி = மாலைக்காலம்; நந்தா =அணையாத

 

248. மெழுக்கம் = மெழுகப்பட்ட இடம்

 

249. வம்பலர் = புதியவர்; சேக்கும் = தங்கும்; கந்து = தெய்வம் உறையும் கம்பம்; பொதி =பொது இடம்

 

250. பரு நிலை = பருத்த நிலை ; ஒல்க = சாய; தீண்டி = உரசி

 

251. பிடி = பெண் யானை; புணர்ந்து = கூடி; உறையும் = தங்கும்

 

பதவுரை:

246. கொண்டி மகளிர், உண்துறை மூழ்கி = பகைவர்களின் நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பெண்டிர், நீர் உண்ணும் துறையில் மூழ்கி


247. அந்தி மாட்டிய நந்தா விளக்கின் = மாலைக்காலத்தில் கொளுத்திய அணையா விளக்குகளையுடைய


248. மலர் அணி மெழுக்கம், ஏறிப் பலர் தொழ = மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மெழுகிய இடத்தில் ஏறி, உள்ளூரார் பலரும் தொழ


249. வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில் = புதிதாக வந்தவர்கள் தங்கும் இடங்களில் உள்ள கடவுள் இருக்கும் கம்பங்களையுடைய  பொது இடத்தில்

 
250. பரு நிலை நெடுந் தூண் ஒல்கத் தீண்டி, = பருத்த நிலையில் உள்ள நீண்ட தூண்கள் சாயும்படி உரசி

251. பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையும் = பெரிய நல்ல ஆண் யானைகளுடன் பெண் யானைகள் கூடித் தங்கவும்

கருத்துரை:

கடவுள் உறையும் தூண்கள் உள்ள பொது இடத்தில், பகைவர்களின் நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பெண்டிர், நீர் உண்ணும் துறையில் மூழ்கி, மாலைக்காலத்தில் அணையா விளக்குகளைக் கொளுத்துவர். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சாணியால் மெழுகிய இடத்தில் ஏறிச்சென்று, உள்ளூரார் பலரும் தொழுவர். அந்தப் பொது இடம் புதிதாக வந்தவர்கள் தங்கும் இடமாகவும் இருந்தது. அவ்வூரில் திருமாவளவனின் போருக்குப் பிறகு,  பருத்த நிலையில் உள்ள நீண்ட தூண்கள் சாயும்படி உரசி,  பெரிய நல்ல ஆண் யானைகளுடன் பெண் யானைகள் கூடித் தங்கின.



பாழடைந்த மன்றங்கள்


அரு விலை நறும் பூத் தூஉய், தெருவில்
முது வாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரி புரி நரம்பின் தீந் தொடை ஓர்க்கும்
பெரு விழாக் கழிந்த, பேஎம் முதிர், மன்றத்து,                255

 

சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி,
அழல் வாய் ஓரி அஞ்சு வரக் கதிர்ப்பவும்;
அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்;
கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ,
பிணம் தின் யாக்கைப் பேய் மகள் துவன்றவும்;             260

 

அருஞ்சொற்பொருள்:

252. அரு விலை = அரிய விலை; தூஉய் = தூவி

 

253. முது வாய் = பேரறிவு வாய்ந்த; கோடியர் = கூத்தர்

 

254. திரி புரி = முறுக்கிய; தொடை =யாழ்; ஓர்க்கும் = கேட்கும்

 

255. பேஎம் = அச்சம்; மன்றம் = பொது இடம்

 

256. அறுகை = அறுகம்புல்; பம்புதல் = பரவுதல்

 

257. அழல்வாய் = கொடிய வாய்; ஓரி = நரி; கதிர்ப்பவும்= ஊளையிடவும்; விளிப்பவும் = கூப்பிடவும்

 

259. கணம் = கூட்டம்; கூளி = ஆண்பேய்; கதுப்பு =மயிர்; இகுத்து =தொங்கவிட்டு; அசைஇ = ஆடி

 

260. யாக்கை =உடல்; துவன்றவும் = நெருங்கவும்

 

பதவுரை:

252. அரு விலை நறும் பூத் தூஉய், தெருவில் = அரிய விலைக்கு வாங்கிய நறுமணமுள்ள பூக்களைத் தூவிய தெருவில்

 

 

256. சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி = சிறிய நெருஞ்சிப் பூக்களோடு அறுகம்புல்லும் பரந்து கிடக்க


257. அழல் வாய் ஓரி அஞ்சு வரக் கதிர்ப்பவும் = கொடிய வாயையுடைய நரி பிறர் அஞ்சுமாறு ஊளையிடவும்

 

258. அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் = அழுகின்ற குரலையுடைய கோட்டான்களோடு ஆண்டலைப் பறவைகள் கூப்பிடவும்


259. கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ = கூட்டமாக இருக்கும் ஆண்பேய்களுடன், தங்கள் தலைமயிரைத் தொங்கவிட்டுக்கொண்டு ஆடி,

 

260. பிணம் தின் யாக்கைப் பேய் மகள் துவன்றவும் = பிணம் தின்னும் பெண்பேய்கள் கூடி நிற்கவும்


கருத்துரை:

திருமாவளவனின் போருக்குமுன், பகைவர்களின் நாட்டில் விழாவிற்காக, அதிக விலை கொடுத்து வாங்கிய நறுமணம் மிகுந்த மலர்களைத் தெருவில் தூவி இருப்பர். அப்பொழுது, பேரறிவுடைய கூத்தர்கள் மன்றங்களில் ஆடும் ஆட்டத்திற்கு ஏற்ப, முழவின் ஓசையும், யாழின் இசையும் சேர்ந்து ஒலிப்பதை மக்கள் கேட்டு மகிழ்வர். இப்பொழுது அத்தகைய விழாக்கள் இல்லாமல் போயின. மேலும், அச்சம் நிறைந்த அந்த மன்றங்களில் சிறிய நெருஞ்சிப் பூக்களோடு அறுகம்புற்களும் கலந்து படர்ந்திருக்கின்றன. கொடிய வாயையுடைய நரிகள் ஊளையிடுகின்றன. அழுகின்ற குரல் எழுப்பும் கோட்டான்களோடு ஆண்டலை என்னும் பறவைகளும் ஒலியெழுப்புகின்றன. ஆண்பேய்களின் கூட்டத்தோடு, பெண்பேய்கள் தங்கள் தலைமயிரை விரித்து ஆடிக்கொண்டு பிணங்களைத் தின்கின்றன.



வளமான ஊர்களின் பாழடைந்த நிலை

 

கொடுங் கால் மாடத்து நெடுங் கடைத் துவன்றி,
விருந்து உண்டு ஆனாப் பெருஞ் சோற்று அட்டில்,
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து,
பைங் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்,
தொடுதோல் அடியர் துடி படக் குழீஇ,                               265

கொடு வில் எயினர் கொள்ளை உண்ட
உணவு இல் வறுங் கூட்டு உள்ளகத்து இருந்து,
வளை வாய்க் கூகை நன் பகல் குழறவும்;
அருங் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய,

 

அருஞ்சொற்பொருள்:

261. கொடுங்கால் = உருண்ட தூண்கள்; நெடுங்கடை = நெடிய தலைவாயில்; துவன்றி = நெருங்கி

 

262. ஆனா = குறையாத; அட்டில் = அடுக்களை

 

263. ஒண்மை = அழகு; திணை = இடம் (திண்ணை)

 

264. பைங்கிளி = பசுங்கிளி; மிழற்றும் = மழலைச் சொற்களைப்பேசும்; ஆர் = நிறைவு

 

265. தொடுதோல் = செருப்பு; துடி = ஒருவகைப் பறை; குழீஇ = கூடடி

 

266. கொடு வில் = கொடிய வில்; எயினர் = வேடர்

 

267. கூடு – இங்கு நெற்கூட்டைக் குறிக்கிறது

 

268. கூகை = கோட்டான்

 

269. கடி = காவல்; வரைப்பு = மதில்; கவின் = அழகு

 

பதவுரை:

261. கொடுங் கால் மாடத்து நெடுங் கடைத் துவன்றி = உருண்ட தூண்களையுடைய மாடங்களின் நெடிய தலைவாயிலை நெருங்கி


262. விருந்து உண்டு ஆனாப் பெருஞ் சோற்று அட்டில் = விருந்தினர்கள் இடையறாமல் உண்டும் குறையாத அளவுக்குப் பெருமளவில் சோறு உள்ள அடுக்களையையுடைய


263. ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து = அழகிய சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் திண்ணையிலிருந்து


264. பைங் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்= பசுங்கிளிகள் மழலைச் சொற்களைப் பேசும், பால் வளம் நிறைந்த செழுமையான ஊர்களில்


265. தொடுதோல் அடியர் துடி படக் குழீஇ = செருப்பு அணிந்த கால்களோடு, பறையை அடித்துக்கொண்டு திரண்டு வந்து

267. கொடு வில் எயினர் கொள்ளை உண்ட = கொடிய வில்லையுடைய வேடர்கள் கொள்ளை அடித்து உண்டுவிட்டதால்


268. உணவு இல் வறுங் கூட்டு உள்ளகத்து இருந்து = நெல் இல்லாத நெற்கூடுகளின் உள்ளே இருந்து


269. வளை வாய்க் கூகை நன் பகல் குழறவும் = வளைந்த வாளையுடைய கோட்டான்கள் நல்ல பகலிலும் கூவவும்


270. அருங் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய = அரிய காவலையுடைய மதில்களால் சூழப்பட்ட ஊர்கள் அழகிழந்தன.

 

கருத்துரை:

திருமாவளவனின் போருக்குமுன், பகைவர்களின் அழகிய சுவர்களையுடைய செழுமையான ஊர்களில் உள்ள நல்ல  இல்லங்களின் திண்ணையில் பசுங்கிளிகள் பால் உண்டன. அங்குள்ள உருண்ட தூண்களையுடைய மாடங்களின் நெடிய தலைவாயிலை நெருங்கிச் சென்று, விருந்தினர்கள் இடையறாது உண்டும் குறையாத அளவுக்கு அங்குள்ள அடுக்களையில் சோறு இருந்தது. போருக்குப் பிறகு, தங்கள் செருப்பணிந்த கால்களோடு, பறை அடித்துக்கொண்டு வந்து, கொடிய வில்லையுடைய வேடர்கள் நெற்கூடுகளில் இருந்த நெல்லைக் கொள்ளை அடித்ததால், இப்பொழுது அங்குள்ள நெற்கூடுகளின் உள்ளே இருந்து கோட்டான்கள் கூவுகின்றன. அரிய காவலையுடைய பகைவர்களின் ஊர்கள் இப்பொழுது அழகிழந்து காணப்படுகின்றன.


திருமாவளவனின் கருதியது முடிக்கும் பேராற்றல்


பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற                         270

மலை அகழ்க்குவனே; கடல் தூர்க்குவனே;
வான் வீழ்க்குவனே; வளி மாற்றுவன் என,
தான் முன்னிய துறைபோகலின்,

அருஞ்சொற்பொருள்:

270. மருங்கு = சுவடு

 

271.அகழ்தல் = தோண்டுதல்; தூர்த்தல் = நிரப்புதல்

 

273. முன்னுதல் = கருதுதல்

 

 

பதவுரை:

270. பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற = பெருமளவில் பாழ்செய்தும்

 (சினம்)அடங்காமல், சுவடு தெரியாமல்

271. மலை அகழ்க்குவனே; கடல் தூர்க்குவனே = மலைகளைத் தோண்டுவான்; கடலை நிரப்புவான்


272. வான் வீழ்க்குவனே; வளி மாற்றுவன் என = வானத்தை வீழ்த்துவான், காற்றின் திசையை மாற்றுவான் என்று அனைவரும் புகழ்ந்து கூறும்படி

 

273. தான் முன்னிய துறைபோகலின் = தான் கருதியதைக் கருதியவாறே செய்து முடிக்கும் வல்லமை உடையவன்

 

கருத்துரை:

பகைவர்களின் ஊர்களைப் பெருமளவில் பாழ் செய்தும், திருமாவளவன் தன் சினம் அடங்காமல் இருப்பதைக் கண்ட அனைவரும், ”இவன் மலைகளைச் சுவடு தெரியாமல், முற்றிலும் இல்லாதவாறு தோண்டுவான்; கடல்களைத் தூர்ப்பான் (மணலால் நிரப்புவான்); வானத்தை வீழ்த்துவான்; காற்றின் திசையை மாற்றுவான்.  கருத்தியதை கருதியவாறே செய்து முடிக்கும் வல்லமை உடையவன்.” என்று திருமாவளவனைப் புகழ்ந்து கூறுவர்.



திருமாவளவனின் வெற்றிச்செயல்கள்

 

பல் ஒளியர் பணிபு ஒடுங்க,
தொல் அருவாளர் தொழில் கேட்ப,                        275



வடவர் வாட, குடவர் கூம்ப,
தென்னவன் திறல் கெட, சீறி, மன்னர்
மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள்,
மாத் தானை மற மொய்ம்பின்,
செங் கண்ணால் செயிர்த்து நோக்கி,                   280

புன் பொதுவர் வழி பொன்ற,
இருங்கோ வேள் மருங்கு சாய

 

அருஞ்சொற்பொருள்:

274. ஒளியர் = ஒளிநாட்டார்; பணிபு = தாழ்ந்து, ஒடுங்க = அடங்க

 

275. தொல் = பழைய; அருவாளர் = அருவா நாட்டார்

 

276. வடவர் = வடதிசையிலுள்ள அரசர், குடவர் = மேற்குத் திசையிலுள்ள அரசர்; கூம்ப = மனவெழுச்சி குன்றவும்

 

277. தென்னவன் = பாண்டியன், திறல் = வலிமை; சீறல் = சினத்தல்

 

278. மன் எயில் = நிலைபெற்ற மதில்; கதுவுதல் = கைப்பற்றுதல்; மதன் = செருக்கு ; நோன்மை = வலிமை; தாள் = முயற்சி

 

279. மா = பெரிய; தானை = படை; மறம் = வீரம்; மொய்ம்பு = வலிமை

 

280. செயிர்த்தல் = சினத்தல்

 

281. புன்மை = சிறுமை; பொதுவர் = இடையர்; வழி = வழித்தோன்றல்; பொன்றுதல் = அழிதல்

 

282. இருங்கோவேள் = இருங்கோவேள் என்னும் அரசன்; மருங்கு = சுற்றம்; சாய = கெட

 

பதவுரை:
274. பல் ஒளியர் பணிபு ஒடுங்க =  ஓளிநாட்டார் பலரும் பணிந்து  அடங்க

 

275. தொல் அருவாளர் தொழில் கேட்ப = தொன்மையான அருவா நாட்டினர் ஏவல் கேட்கவும்

 

276. வடவர் வாட, குடவர் கூம்ப = வடதிசையிலுள்ள நாட்டு மன்னர்கள் தோல்வி அடையவும், மேற்குத்திசையிலுள்ள மன்னர்கள் மனவெழுச்சி குன்றவும்

 

277. தென்னவன் திறல் கெட, சீறி, மன்னர் = பாண்டியன் வலிமை கெடவும், சினந்து, மன்னர்களின்

 

278. மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள் = நிலைபெற்ற மதில்களைக் கைப்பற்றும் செருக்கும் வலிய முயற்சியும் உடைய

 

279. மாத் தானை மற மொய்ம்பின் = பெரிய படையும் வீர வலிமையும் உள்ளதால்

 

280. செங் கண்ணால் செயிர்த்து நோக்கி = சிவந்த கண்ணால் சினந்து நோக்கி

 

281. புன் பொதுவர் வழி பொன்ற, = சிறிய முல்லைநில மன்னர்களின் வழித்தோன்றல்களை அழித்து

 

282. இருங்கோ வேள் மருங்கு சாய = இருங்கோவேளின் சுற்றத்தார் கெடவும்

 

கருத்துரை;

ஓளிநாட்டார் பணிந்து அடங்கவும், தொன்மையான அருவா நாட்டினர் ஏவல் கேட்கவும், வடதிசையிலுள்ள நாட்டு மன்னர்கள் தோல்வி அடையவும், மேற்குத்திசையிலுள்ள மன்னர்கள் மனவெழுச்சி குன்றவும் திருமாவளவன் வெற்றி பெற்றவன். பாண்டியனின் வலிமை கெடவும், சினந்து மன்னர்களின் நிலைபெற்ற மதில்களைக் கைப்பற்றும் செருக்கும் வலிய முயற்சியும் உடைய பெரிய படையையுடைவன் திருமாவளவன். வீரமும் வலிமையும் உடைய திருமாவளவன், சினந்து நோக்கி, சிறிய முல்லைநிலப் பகுதிகளை ஆண்ட இடைக்குல மன்னர்களின் வழித்தோன்றல்களை அழித்தவன். இருங்கோவேளின் சுற்றத்தார்களையும் அவன் அழித்தான்.

 

 

சோழ நாட்டையும் உறையூரையும் சிறப்புறச் செய்தல்


காடு கொன்று நாடு ஆக்கி,
குளம் தொட்டு வளம் பெருக்கி,
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி,                      285

கோயிலொடு குடி நிறீஇ,
வாயிலொடு புழை அமைத்து,
ஞாயில்தொறும் புதை நிறீஇ,
பொருவேம் எனப் பெயர் கொடுத்து,
ஒருவேம் எனப் புறக்கொடாது,                                           290

திரு நிலைஇய பெரு மன் எயில்,
மின் ஒளி எறிப்பத்,

 

அருஞ்சொற்பொருள்:

285. பிறங்குதல் = உயர்தல்; உறந்தை =உறையூர் ; போக்குதல் = நீளச்செய்தல்; போக்கி = விரிவுறப்பண்ணி

 

286. நிறீஇ = நிறுவி

 

287. புழை = சிறுவாயில்

 

288. ஞாயில் = மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு; புதை = அம்புக்கட்டு

 

290. புறக்கொடாது = தோற்று ஓடுதல் (புறமுதுகு காட்டி ஓடுதல்)

 

291. மன் = நிலைபெற்ற

 

292. எறிப்ப = ஒளி வீச

 

பதவுரை:

283. காடு கொன்று நாடு ஆக்கி = காடுகளை அழித்து, அவற்றை மக்கள் வாழ்வதற்கேற்ற நாடாக்கி


284. குளம் தொட்டு வளம் பெருக்கி = குளங்களைத் தோண்டி, வளத்கைப் பெருக்கி


285. பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி = உயர்ந்த நிலைகளையுடைய மாடங்கள் அமைந்த  உறையூரை விரிவுறச் செய்து

286. கோயிலொடு குடி நிறீஇ =கோயில்களோடு குடிமக்கள் வாழ்வதற்குரிய இடங்களை அமைத்து


287.வாயிலொடு புழை அமைத்து = பெரிய வாயில்களோடு சிறிய வாயில்களையும் உண்டாக்கி


288. ஞாயில்தொறும் புதை நிறீஇ = மதில்களில் உள்ள அம்பு எய்யும் இடங்கள் தோறும்
 அம்புக் கூட்டை நிறுவி,


289. பொருவேம் எனப் பெயர் கொடுத்து =
போர் செய்வேன் என்று உறுதிமொழி கூறி


290. ஒருவேம் எனப் புறக்கொடாது = போரை
விட்டு நீங்கமாட்டேன் என்று கூறி, புறங்கொடுத்து ஓடாமல் 

291. திரு நிலைஇய பெரு மன் எயில் = வெற்றித்
 திருமகள் நிலைத்த, பெரிய நிலையான கோட்டை மதில்


292. மின் ஒளி எறிப்ப =
மின்னலைப் போல் ஒளி வீச

 

கருத்துரை:

திருமாவளவன் தன் நாட்டில் இருந்த காடுகளை அழித்து குடிமக்கள் வாழ்வதற்கேற்ற இடமாக்கினான்; குளங்களைத் தோண்டி, பல்வேறு வளங்களையும் பெருக்கினான்; பெரிய நிலையுடைய மாடங்களையுடைய உறையூரை விரிவுபடுத்தி, அங்கு, கோயில்களையும் குடிமக்கள் வாழ்வதற்குரிய இடங்களையும் அமைத்தான்; பெரிய வாயில்களோடு சிறிய வாயில்களையும் உண்டாக்கி, மதில்களில் வீரர்கள் மறைந்திருந்து அம்பெய்தற்குரிய இடங்களில்  அம்புக்கூட்டை நிறுவினான்; “போர் செய்வேன்” என்று சூள் உரைத்து, ”போர்க்களத்தைவிட்டு அகலமாட்டேன்” என்று கூறி, புறங்கொடாது வீரத்தோடு இருந்தான்.  வீரத் திருமகள் நிலைத்த பெரிய நிலையான அவனது கோட்டை மதில் மின்னலைப் போன்று ஒளி வீசியது. திருமாவளவனின் வெற்றியும் புகழும் உலகெலாம் மின்னலைப்போல் ஒளி வீசியது.

 

 

திருமாவளவனின் சிறப்பு

 

                                தம் ஒளி மழுங்கி
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய
பசு மணி பொருத பரு ஏர் எறுழ்க் கழல் கால்,
பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும்,                              295

முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும்,
செஞ் சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண்
அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமாவளவன்

 

அருஞ்சொற்பொருள்:

293, விசித்தல் = இறுகக்கட்டுதல்; பிணித்தல் = சேர்த்துக் கட்டுதல்

 

294. பசுமை = அழகு; பசுமணி = அழகிய மணி; பரு = பெரிய; ஏர் = அழகு; எறுழ் = வலிமை

 

 

296. திளைத்தல் = அழுந்துதல்

 

298. அரிமா = சிங்கம்; அணங்கு =வருத்தம்

 

பதவுரை:

 292. தம் ஒளி மழுங்கி = தங்கள் புகழ் கெட்டு


293. விசி பிணி முழவின் வேந்தர் சூடிய = இறுகக்கட்டிய முழவினையுடைய வேந்தர்களின்

 

294. பசு மணி பொருத பரு ஏர் எறுழ்க் கழல் கால் = அழகிய மணியையுடைய முடி, பருத்த அழகிய வீரக் கழலினைக் கட்டிய கரிகாலனின் கால்களைத் தொட


295. பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும் =
பொன்னால் செய்த தொடிகளை அணிந்த அவனது புதல்வர்கள் ஓடி ஆடவும்,

296. முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும் = உடல்முழுதும் அணிகலன்களை அணிந்த மகளிரின் மொட்டுப் போன்ற முலைகள் அழுத்துவதால் 

 

297. செஞ் சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண்= அவனது சிவந்த சந்தனம் பூசிய மார்பில் ஒளியுடைய அணிகலன்களுடன்


298. அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் = சிங்கத்தைப் போன்ற வலிமையுடைய


299.திருமாவளவன் = திருமாவளவன்

 

கருத்துரை:

திருமாவளவனின் புகழைக் கேட்டு, தங்கள் புகழ் கெட்டுவிடுமோ என்று அஞ்சி, இறுகக்கட்டிய முழவினையுடைய வேந்தர்கள் தங்கள் அழகிய மணியையுடைய முடி, பருத்த அழகிய வீரக் கழலினைக் கட்டிய கரிகாலனின் கால்களைத் தொடுமாறு அவன் கால்களில் வீழ்ந்து வணங்கினர்.  பொன்னால் செய்த தொடிகளை அணிந்த அவனது புதல்வர்கள் ஓடி ஆடினர். உடல்முழுதும் அணிகலன்களை அணிந்த மகளிரின் மொட்டுப் போன்ற முலைகள் திருமாவளவனின் மார்பை அழுத்துவதால்  அவனது சிவந்த சந்தனம் அழிந்த மார்பில் ஒளியுடைய அணிகலன்களுடன் சிங்கத்தைப் போன்ற வலிமையுடையவனாகத்  திருமாவளவன் விளங்கினான்.

 

 

தலைவன் தலைவியைப் பிரியாமல் இருப்பதற்குக் காரணம்


                          தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய, கானம்; அவன்                                                 300

கோலினும் தண்ணிய, தட மென் தோளே!

அருஞ்சொற்பொருள்:

299. தெவ்வர் = பகைவர்; ஓக்கிய = உயர்த்திய (எறிந்த)

300. வெய்ய = கொடிய

301. தண்ணிய = குளிர்ந்த; தட = பெரிய

பதவுரை:

299. தெவ்வர்க்கு ஓக்கிய = பகைவர்க்கு எறிந்த


300. வேலினும் வெய்ய, கானம்; அவன் = வேலைவிடக் கொடியது (நான் செல்லவிருக்கும்) காடு, அவனுடைய

301. கோலினும்
தண்ணிய, தட மென் தோளே!  = செங்கோலைவிடக் குளிர்ச்சியானது என் தலைவியின் பெரிய மென்மையான தோள்கள்.

 

கருத்துரை:

நான் செல்லவிருக்கும் காடு திருமாவளவன்பகைவரை நோக்கி எறிந்த வேலைவிடக் கொடியது. என் தலைவியின் பெரிய மென்மையான தோள்கள் அவனுடைய செங்கோலைவிடக் குளிர்ச்சியானவை.

 



[1]. சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்

    காமவேள் கோட்டம் தொழுதார் கணவரோடு

   தாமின் புறுவர் உலகத்துத் தையலார்

   போகஞ்செய் பூமியினும் போய்ப் பிறப்பர்                              (9: 59-62)

 

[2]. பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார், பட்டினப்பாலை, பக்கம் 38

Comments

Popular posts from this blog

பட்டினப்பாலை - அறிமுகம்

பட்டினப்பாலை - மூலம்

உங்கள் கவனத்திற்கு